மலைவாழ் மக்களின் வாக்குகளைக் குறிவைக்கும் ஆ.ராசா! | D.M.K. A.Raja campaign

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (08/04/2019)

கடைசி தொடர்பு:12:50 (08/04/2019)

மலைவாழ் மக்களின் வாக்குகளைக் குறிவைக்கும் ஆ.ராசா!

நீலகிரி மாவட்டத்தில், மலைவாழ் மக்களின்  கிராமம் கிராமமாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார், ஆ.ராசா.

ஆ.ராசா பிரசாரம்

நீலகிரி தொகுதியில்,  தி.மு.க, அ.தி.மு.க இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தி.மு.க சார்பில் ஆ.ராசா களம் காண்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நீலகிரி தொகுதியில் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் போட்டியிடுகின்றன. அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் தியாகராஜன் வேட்புமனு தாக்கல் செய்தாலும், பல நாள்களாக பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தார். பின்னர், எஸ்.பி.வேலுமணி நீலகிரிக்கு வந்து கள நிலவரங்களைக் கேட்டறிந்து, நீலகிரி மாவட்டத்தில் பிரசாரத்தில் தீவிரம்காட்டவேண்டியது அவசியம்  என கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், நீலகிரி மாவட்டம்  கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளில் வாகன பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். ஆனால், தி.மு.க சார்பில் ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டார். ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ராசாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மட்டும் பிராசாரத்தில் ஈடுபட்டார். இது, நீலகிரி மாவட்ட தி.மு.க தொண்டர்களிடையே அதிருப்திக் குரல்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த ராசா, இந்த முறை மலைவாழ் மக்களின் வாக்குகளைக் குறிவைத்து கூடலூர், பந்தலூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் தாமாகவே களமிறங்கி, மலை கிராமங்களில் உள்ள மக்களைச் சந்தித்து வாக்குறுதிகளை அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.