ஈஸ்வரனுடன் மோத வேண்டுமா? - மீண்டும் களத்தில் இறங்கிய அமைச்சர் தங்கமணி | Clash with Eswaran, Minister Thangamani in news again

வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (08/04/2019)

கடைசி தொடர்பு:17:08 (08/04/2019)

ஈஸ்வரனுடன் மோத வேண்டுமா? - மீண்டும் களத்தில் இறங்கிய அமைச்சர் தங்கமணி

'தி.மு.க கூட்டணியில் இருக்கின்ற 10 பேர் தாங்கள்தான் பிரதமர் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தி.மு.க கூட்டணியை விமர்சித்துள்ளார் அமைச்சர் தங்கமணி. 

ஈஸ்வரனுடன் மோத வேண்டுமா? - மீண்டும் களத்தில் இறங்கிய அமைச்சர் தங்கமணி

"தினம்தோறும் பொய்யான செய்தியைக் கூறும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரனுடன் விவாதம் நடத்த விரும்பவில்லை" என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் காளியப்பனை ஆதரித்து அமைச்சர் தங்கமணி எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் முத்துகாப்பட்டியிலும், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி, அக்கியம்பட்டி மற்றும் சேந்தமங்கலம் பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க அரசு, எப்போதும் ஏழைகளைச் சார்ந்தே செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான சாலை வசதி செய்துள்ளோம். அந்த வகையில் சேந்தமங்கலத்தில் இருந்து ராசிபுரம் வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கத் திட்டமிட்டு உள்ளோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை எடுத்துக் கூறி பொதுமக்கள் இடையே ஓட்டு கேட்டு வருகிறோம். காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் 10 பேர் தாங்கள்தான் பிரதமர் எனத் தெரிவிக்கின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரும்கூட, நாங்கள்தான் பிரதமர் என்கின்றனர். ஆனால், இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் மோடி மட்டுமே ஆவார்" என்றார்.

கொங்கு ஈஸ்வரன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, "ராசிபுரம் கொங்கு திருமண மண்டபம் தொடர்பாக  நானும், சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜாவும் சேர்ந்து, ஒருவரை விலைக்கு வாங்கிவிட்டதாகவும், அவரது வீட்டுக்குச் சென்றதாகவும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர்  ஈஸ்வரன் தெரிவிக்கிறார். நாங்கள் வீட்டுக்குச் சென்றது உண்மை. அதை மறைக்கவில்லை. நாமகிரிப்பேட்டையில் செயல்வீரர்கள் கூட்டத்துக்குச் சென்றுவிட்டு வந்தபோது, என்னை மறித்த சம்பந்தப்பட்ட உறுப்பினர், வீட்டுக்கு வந்து செல்லுமாறு அழைப்பு விடுத்தார். அதன்பேரிலேயே அங்கு சென்றேன். இந்தப் பிரச்னை ஓராண்டாக்கும் மேலாக உள்ளது. என்னைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் கொங்கு மண்டபம் தொடர்பான புகார்களைத் தெரிவிப்பார். இது சமுதாயம் சார்ந்த மண்டபம். யாரும் கோபப்பட வேண்டாம். அமைதியாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்து வருகிறேன். கொ.ம.தே.க வேட்பாளர் சின்னராஜ் மீது சரிவர கணக்குக் காண்பிக்கவில்லை என்ற புகார் தொடர்பான ஆதாரங்களைக் கொடுத்துள்ளனர். வேட்பாளர் மீது பிரச்னையா, இல்லையா என்பதைப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.  ஆனால், கொச்சைப்படுத்தும் விதமாக ஈஸ்வரன் பேசி வருகிறார். அந்த மண்டபம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதுமட்டுமன்றி, வருவாய்த் துறையினரைச் சந்திப்பதாக ஈஸ்வரன் புகார் கூறியுள்ளார். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வட்டாட்சியரோ, கிராம உதவியாளரோ எவரையும் சந்தித்தது கிடையாது. அப்படிப் புகார் இருந்ததால், தேதி, நேரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டும். அதற்காகப் பழைய நிகழ்ச்சியைக் காண்பித்து, இதுதான் எனத் தெரிவிக்கக் கூடாது. சிறந்த அரசியல்வாதியாக ஈஸ்வரனை நினைத்தேன். பொய்க் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததால், அதன் பின்னர் மாபெரும் இயக்கமான அ.தி.மு.க-வானது, ஈஸ்வரனுடன் மோத வேண்டுமா என்ற எண்ணம் எழுந்துள்ளது.

தி.மு.க-விடம் கொ.ம.தே.க-யை அடகு வைத்துவிட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர், கட்சியையும், கொங்கு மக்களையும் எப்படிப் பாதுகாப்பார்? தினம்தோறும் பொய்யான செய்தியைக் கூறும் ஈஸ்வரனுடன் விவாதம் நடத்த விரும்பவில்லை. இதற்குப் பயம் என்றுகூட அவர் கூறலாம். மக்களவைத் தேர்தல் பணியும், 18 சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளும் உள்ளன. அவ்வாறு விவாதிக்க விரும்பினால், ஏப்ரல் 18-ம் தேதிக்குப் பின்னர், ஈஸ்வரனுடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன். பொள்ளாச்சி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், அதை வெளிக்கொண்டு வந்தது சட்டப்பேரவைத் துணைத்தலைவர் ஜெயராமன்தான். அவர் எந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக உள்ளார்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்