`அழுத்தினோம்; ஸ்டார்ட்டாகிவிட்டது' - பஸ்ஸுக்குள் சிக்கிய சிறுவர்கள் அலறல் | Bus was operated by kids ended up in accident

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (08/04/2019)

கடைசி தொடர்பு:14:55 (08/04/2019)

`அழுத்தினோம்; ஸ்டார்ட்டாகிவிட்டது' - பஸ்ஸுக்குள் சிக்கிய சிறுவர்கள் அலறல்

சென்னை திருவல்லிக்கேணியில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ்ஸில் ஏறிய சிறுவர்கள், விளையாட்டுத்தனமாக சிவப்பு நிற பட்டன் ஒன்றை அழுத்த, அடுத்த நிமிடமே பஸ் ஸ்டார்ட்டானது. இதனால் பயத்தில் சிறுவர்கள் அலறினர். இந்தச் சமயத்தில், அந்தப் பகுதியில் உள்ள மின்பெட்டியில் பஸ் மோதி நின்றதால் நிம்மதியடைந்த சிறுவர்கள், அவசர அவசரமாக இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

  சிறுவர்கள் விளையாட்டால் விபத்தில் சிக்கிய பஸ்

சென்னையில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் தங்கும் விடுதிக்குச் செல்லும் சாலையில் (சென்னை பத்திரிகையாளர் மன்றம் அருகில்) தனியார் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பஸ்ஸில், மெட்ரோ நிறுவன ஊழியர்கள் பணிக்குச்செல்வது வழக்கம். தினமும் ஊழியர்கள் பஸ்ஸில் அழைத்துச்செல்லப்படுவார்கள். இரவில், பஸ் அங்கு நிறுத்தப்படும். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மதியம் 2.45 மணியளவில், பஸ் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது, பஸ்ஸுக்குள் ஏறி சிறுவர்கள் விளையாடினர். இந்தச் சமயத்தில், டிரைவர் இருக்கையில் அமர்ந்த சிறுவன் ஒருவன், சிவப்பு நிற பட்டனை அழுந்த, அடுத்த நிமிடமே பஸ் ஸ்டார்ட்டானது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் சிறுவர்கள் திகைத்தனர். சிறுவனின் கால், பயத்தில் ஆக்ஸிலேட்டரில் பட, கியரும் விழ, பஸ் அங்கிருந்து கிளம்பியது. இதனால் சிறுவர்களில் சிலர் குஷியாகினர். மற்ற சிறுவர்கள்  அதிர்ச்சியில் உறைந்தனர். 

  பஸ், இடது வலதாக ஓடத்தொடங்கியது. இதனால் மாணவர்கள் அலறினர். இந்தச் சமயத்தில், சாலையின் ஓரத்திலிருந்த மின்பெட்டியில் பஸ் மோதி நின்றது. நல்லவேளை பஸ் அதிக வேகத்தில் செல்லவில்லை. இதனால் உயிர்சேதம் ஏற்படவில்லை. 

 இதையடுத்து, பஸ்சுக்குள் இருந்த சிறுவர்கள் அவசர அவசரமாகக் கீழே இறங்கி ஓடினர். இதைப் பார்த்த ஆட்டோ டிரைவர்கள் சிறுவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் விவரத்தைக் கேட்டபோதுதான் மின்பெட்டியில் பஸ் மோதிய தகவல் தெரியவந்தது. இதையடுத்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறுவர்களை ஆட்டோ டிரைவர்கள் ஒப்படைத்தனர்.  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதன்,  சிறுவர்களிடம் விசாரணை நடத்தினார். சம்பந்தப்பட்ட பஸ்ஸின் டிரைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் காவல் நிலையத்துக்கு வந்தார். போலீஸாரிடம் அவர், ``இந்தப் பஸ்ஸுக்கு சாவி கிடையாது. பட்டனை அழுத்தினால் ஸ்டார்ட்டாகிவிடும். விளையாட்டுத்தனமாக சிறுவர்கள் செய்த வேலையால் விபரீதம் நடந்துள்ளது. நல்லவேளை யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை" என்றார். இருப்பினும் டிரைவரின் அஜாக்கிரதையைக் கண்டித்தும், சிறுவர்களை  எச்சரித்தும் அனுப்பினர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''மின்பெட்டியில் பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பந்தப்பட்ட டிரைவர் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது சிறுவர்கள் என்பதால் எச்சரித்து அனுப்பியுள்ளோம். ஆனால், மின்வாரியம் சார்பில் மின்பெட்டி சேதமடைந்ததாகப் புகார் கொடுத்தால், வழக்குப்பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.