‘எடப்பாடியே காய்கிறார்; ஏ.சி.எஸ்-க்கு ஏசியா?!’- கலாய்க்கும் வேலூர் அ.தி.மு.க நிர்வாகிகள் | A.C.Shanmugam campaign in AC

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (08/04/2019)

கடைசி தொடர்பு:14:45 (08/04/2019)

‘எடப்பாடியே காய்கிறார்; ஏ.சி.எஸ்-க்கு ஏசியா?!’- கலாய்க்கும் வேலூர் அ.தி.மு.க நிர்வாகிகள்

சுட்டெரிக்கும் வெயிலை தாங்கிக்கொள்ள முடியாமல், பிரசார வேனை லக்ஸுரி வாகனம் போல மாற்றி, வாக்கு சேகரிக்கிறார் ஏ.சி.சண்முகம். இதைப் பார்த்து நொந்துபோன அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினர், ‘‘எடப்பாடியே காய்கிறார், ஏ.சி.எஸ்-க்கு ஏசியா...’’ என்று கலாய்க்கின்றனர்.

மேற்கூரை அமைத்த வாகனத்தில் பிரசாரம் செய்யும் ஏ.சி.சண்முகம்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். ‘காஸ்ட்லி’ வேட்பாளராகக் கருதப்படும் ஏ.சி.சண்முகம், பெயருக்கு ஏற்றாற்போல் ‘ஏசியில்’ இருந்தே பழக்கப்பட்டவர். இதனால், அனல்பறக்கும் தேர்தல் களத்தில் வெயில் படாமல், வேனில் ‘குளுகுளு’ பிரசாரம் செய்கிறார். பிரசார வேனும் மேற்கூரை, ஏசி வசதியுடன் சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரசாரம்செய்த எடப்பாடி பழனிச்சாமி.

ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுட்டெரிக்கும் வெயிலில் வியர்க்க விறுவிறுக்க, திறந்த வேனில் நின்றபடியே பிரசாரம் செய்தனர். அப்போதே, வெயிலை தாங்கிக்கொள்ளமுடியாமல் ஏ.சி.சண்முகம், நிமிடத்துக்கு ஒருமுறை முகத்தைத் துடைத்துக்கொண்டே வாக்கு சேகரித்தார். வெயிலைப் பார்த்து பயந்துகொண்டு 5 நிமிடத்துக்கு மேல் ஒரு இடத்தில் பிரசாரம் செய்வதில்லை.

ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்த காட்சி.

இரண்டு வரி பேசிவிட்டு வேனுக்குள் பதுங்கிவிடுகிறார். வியர்வையைத் துடைக்க ‘டிஷ்யூ’ பேப்பர் பயன்படுத்துகிறார். தலைமுடியை நிமிடத்துக்கொரு முறை சீப்பால் வாரிப் படியவைக்கிறார். முகத்துக்கு பவுடர் பூசி அழகாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறார். ஏ.சி.சண்முகம் செய்யும் செயலைப் பார்த்து நொந்துபோன அ.தி.மு.க கூட்டணி கட்சியினர், ‘எடப்பாடியே காய்கிறார்... ஏ.சி.எஸ்ஸுக்கு குளுகுளு பிரசாரமா... என்று கிண்டல் அடிக்கின்றனர்.