`தலையில் தலைப்பாகை, தோளில் சால்வை!'- நீலகிரியில் முதல்வர் எடப்பாடி பிரசாரம் | EPS slams stalin in Ooty campaign

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (08/04/2019)

கடைசி தொடர்பு:16:12 (08/04/2019)

`தலையில் தலைப்பாகை, தோளில் சால்வை!'- நீலகிரியில் முதல்வர் எடப்பாடி பிரசாரம்

``ஸ்டாலின் குட்டு வெளிப்பட்டுவிட்டது'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

முதல்வர் எடப்பாடி பிரசாரம்

நீலகிரி தனி தொகுதி வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து நீலகிரி மாவட்டம் ஏடி.சி சந்திப்பு பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். தலையில் தலைப்பாகை, சால்வையுடன் காணப்பட்ட முதல்வர், அ.தி.மு.க ஆட்சியின் சாதனைகளைப் பேசியபின் ஸ்டாலின் குறித்து மிகுந்த காட்டமாகப் பேசினார். ``அம்மா வழியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எங்கள் ஆட்சியைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாத ஸ்டாலின் வேறு வழியில்லாமல் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை வைத்து நாடகமாடுகிறார். கொடநாடு சம்பவம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை பேசிவருகிறார்.

குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தி.மு.க வழக்கறிஞர்கள் வாதாடி ஜாமீன் வாங்கிக்கொடுத்தனர். இந்தக் கொலை சம்பவத்தில் என்னைச் சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் சயான் மற்றும் மனோஜ் என்ற குற்றவாளிகளை அழைத்து முதல்வரை தொடர்புபடுத்தி பேசச் செய்தவர் ஸ்டாலின். தற்போது அவர்கள் ஓட்டலில் பேசிய வீடியோ வெளியாகி ஸ்டாலின் குட்டு வெளிப்பட்டுவிட்டது. அரசியல் ஆதாயத்துக்காக நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எங்கு சென்றாலும் என்னையும், அமைச்சர்களையும் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஓட்டல்கள், செல்போன் கடைகளில் வன்முறையில் ஈடுபடுவது தி.மு.கதான், நாங்கள் இல்லை" என்றார்.

கருணாநிதி இருக்கும் வரை ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி மட்டுமே வழங்கியிருந்தார். கருணாநிதி மறைவுக்குப் பின் இவராகவே தலைவராகி விட்டார். கருணாதியிக்கு உடல் நலம் பாதித்தது முதல் ஸ்டாலின் அவரை வீட்டு சிறையில் வைத்துவிட்டார். கருணாநிதிக்கு தொண்டைப் பிரச்னை மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று உயர் சிகிச்சை அளிக்காதது ஏன். கூலிப்படை தலைவராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி உயிருடன் இருக்கும் போது ஸ்டாலினுக்கு ஏன் தலைவர் பதவி தரப்படவில்லை. அவர் மீது கருணாநிதிக்கு  நம்பிக்கை இல்லை. ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளித்ததுபோல் ஏன் கருணாநிதிக்கு அளிக்கப்பட வில்லை ஸ்டாலின் நினைத்திருந்தால் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று உயர்  சிகிச்சை அளித்து கருணாநிதியைக் காப்பாற்றியிருக்கலாம். கருணாநிதி இறந்த பிறகு இவராகவே தலைவராகிவிட்டார்.