``போட்டியிடவில்லை என்றால் ஆதரவு என அர்த்தமல்ல!" அமித் ஷா சந்திப்பு குறித்து அய்யாக்கண்ணு | Farmer ayyakanu explains why he decided to withdraw his decision to contest against modi

வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (08/04/2019)

கடைசி தொடர்பு:16:51 (08/04/2019)

``போட்டியிடவில்லை என்றால் ஆதரவு என அர்த்தமல்ல!" அமித் ஷா சந்திப்பு குறித்து அய்யாக்கண்ணு

``விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படாத, அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளாத அரசு, இப்போது எங்களை சந்திக்க வருகிறார்கள் என்றால், ஏன் என்று எங்களுக்கு தெரியாதா?"

``போட்டியிடவில்லை என்றால் ஆதரவு என அர்த்தமல்ல!

விவசாயிகள் பிரச்னையை மையப்படுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.  பலமுறை பிரதமர் மோடியைச் சந்திக்க முயன்றும், பிரதமர் விவசாயிகளிடம் பேசவில்லை. பிரதமர் மோடி ஆட்சியமைத்த பின்னர் அதிக அளவிலான போராட்டங்கள் நடைபெற்றாலும், அய்யாக்கண்ணுவின் போராட்டம், இந்தியா முழுவதும் அதிக கவனத்தை ஈர்த்தது. அதோடு நிற்காமல், இந்தியா முழுவதும் 207 விவசாயச் சங்கங்கள் இணைந்து, டெல்லியில் போராட்டம் நடத்தவும் அய்யாக்கண்ணுவின் போராட்டம் தூண்டுகோலாக அமைந்தது என்றும் கூட சொல்லலாம். 

அய்யாக்கண்ணு

கடந்த மாதம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாத பா.ஜனதா அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தமிழக விவசாயிகள் 111 பேர் அவரை எதிர்த்துப் போட்டியிட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது. இருந்தும் அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளும் அரசின் தரப்பிலிருந்து நடந்து கொண்டே இருந்தன. 

இந்நிலையில் நேற்று, பியுஷ் கோயல், அமித் ஷா, அமைச்சர் தங்கமணி, அய்யாக்கண்ணு ஆகியோருக்கும் இடையே சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை அமைச்சர் தங்கமணி செய்திருந்தார். சந்திப்பு முடிந்து வெளியே வந்த அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் ``பா.ஜ.க தலைவர் அமித் ஷாவைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. விவசாயிகளின் நலன் குறித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதி கொடுத்திருக்கிறார்கள். அதனால், வாரணாசியில்  மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடப் போவதில்லை" என்று தெரிவித்தார். இதுகுறித்து விளக்கமாக அய்யாக்கண்ணுவிடம் பேசினோம்.

``பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடப்போவது இல்லை என்கிற திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?"

``141 நாள்கள் டெல்லியில் நாங்கள் போராடினோம். ஆனால் பா.ஜ.க அரசு எங்களை மதிக்கவில்லை. எங்களால் முடிந்த அளவு விவசாயிகளின் நிலையை எடுத்துச் சொன்னோம். அதைப் பற்றி பிரதமர் மோடி விவசாயிகளிடம் எதுவும் பேசவில்லை. அந்த அதிருப்தியின் காரணமாக, வாரணாசியில் போட்டியிடப்போகிறோம் என்று கடந்த மாதம் முடிவெடுத்தோம். அதை அறிவித்தபோது, ஆளும் தரப்பு கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். அதனால், அழைத்துப்  பேசுகிறார்கள். அதில் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதி கொடுத்திருக்கிறார்கள். அதன் பின்புதான் போட்டியிடவில்லை என அறிவித்திருக்கிறோம்."

``அமித் ஷா சந்திப்பில் என்ன நடந்தது? என்ன மாதிரியான கோரிக்கைகளை நீங்கள் முன்வைத்தீர்கள்?"

``விளைபொருள்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். நதிகளை இணைப்பதற்கு கமிட்டி அமைக்க வேண்டும். மரபணு விதைகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயது நிறைந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்குத் தனிநபர் காப்பீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தோம். முன்வைத்த உடன் அவர்கள் கோரிக்கைகள் பற்றி விவாதம் நடத்தினர். நானும் ஒவ்வொரு திட்டத்தில் இருக்கும் நன்மைகளை எடுத்துச் சொன்னேன், அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்."

அய்யாக்கண்ணு

``இத்தனை நாள்களாகக் கண்டுகொள்ளாத அரசு, இப்போது அழைத்துப் பேசும்போது எப்படி நம்பிக்கை வருகிறது?"

``இதற்கு முன்பு வரைக்கும் விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படாத, அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளாத அரசு, இப்போது எங்களை சந்திக்க வருகிறார்கள் என்றால், ஏன் என்று எங்களுக்கு தெரியாதா? எல்லாம் அரசியலுக்காகத்தான் என்பது எங்களுக்கும் தெரியும். இருந்தும் இப்போதாவது அழைத்துப் பேசுகிறார்கள். உறுதி கொடுக்கிறார்கள். அதைத் தேர்தல் அறிக்கையில் உறுதி செய்திருக்கிறார்கள். அதனால்தான் சிறிய நம்பிக்கை பிறந்திருக்கிறது."

``காங்கிரஸ் ஆட்சியிலும் இதுபோன்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. நிறைவேற்றப்படவில்லை... அப்படியென்றால் இதுவும் அப்படித்தான் இருக்குமா?"

``அவர்கள்தான் செய்யவில்லை நீங்களாவது (பா.ஜ.க) செய்யுங்கள் என்றுதான் கடந்த முறை இவருக்கு விவசாயிகள் வாக்களித்தனர். ஆனால், விவசாயிகளுடைய கோரிக்கைகளை இவரும் காதுகொடுத்து கேட்கவில்லை. அதனால்தான் விவசாயிகள் போராட்டங்களை அதிகமாக நடத்தினோம். போட்டி என்றதும், அழைத்துப் பேசியிருக்கிறார்கள்."

``கடந்த தேர்தல் நேரங்களிலும் பா.ஜ.க சார்பில் இதுபோல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் நிறைவேற்றவில்லை. இதை எப்படி நம்புகிறீர்கள்?"

``இப்போது அழைத்துப் பேசியிருக்கிறார்கள். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் டெல்லியில் போராடுவோம். அழைத்துப் பேசினால் இணக்கமாகச் செல்வோம் என்று அர்த்தம் கிடையாது."

``உங்கள் ஆதரவு இந்தத் தேர்தலில் யாருக்கு?"

``போட்டியிடவில்லை என்றால் ஆதரவு என்று அர்த்தமில்லை. அதை வரும் 10-ம் தேதி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க பொதுக்குழுவைக் கூட்டி அறிவிப்போம்."


டிரெண்டிங் @ விகடன்