`அவங்க மேல என்னதான் வருத்தமிருந்தாலும், அதவிட்டுத்தள்ளுங்க!’ - சி.வி.சண்முகத்துக்கு எடப்பாடியின் அட்வைஸ் | EPS advice to Minister CV shanmugam

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (08/04/2019)

கடைசி தொடர்பு:16:43 (08/04/2019)

`அவங்க மேல என்னதான் வருத்தமிருந்தாலும், அதவிட்டுத்தள்ளுங்க!’ - சி.வி.சண்முகத்துக்கு எடப்பாடியின் அட்வைஸ்

``அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளைத் தவிர்த்து, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் நிறையவே குழப்பம் நீடிக்கிறது. இது எடப்பாடிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா இருக்கும்போது தேர்தல் சமயங்களில், கட்சித் தலைமையிலிருந்து சம்பந்தப்பட்ட தொகுதிக்கு ஒதுக்கப்படும் பணம் கடைமட்ட நிர்வாகிவரை, எந்த மாற்றமுமின்றி சென்று சேரும். அதை இடையிலுள்ள யாரும் தட்டிப்பறிக்க முடியாது. அதேபோல கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர் அவரின் வெற்றிக்கு உழைக்கத் தொடங்கிவிடுவர். தங்கள் கட்சியைச் சேர்ந்தவரைப்போல அவர்களைப் பாவித்து வழிநடத்துவர். ஆனால், அப்படிப்பட்ட கட்டுக்கோப்பான நடைமுறை இந்தத் தேர்தலில் இல்லை என்கிறார்கள்.

சுதிஷ்

``ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல் என்பதால், தேர்தல் பணிகளில் முழுவீச்சில் களமிறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. `தேர்தல் செலவுகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற அவரது உத்தரவை அமைச்சர்கள் யாரும் பின்பற்றுவதில்லை. ஆட்சி முடிவதற்குள் பணத்தைச் சுருட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இன்னும் சிலரோ, பணம் கொழிக்கும் இலாக்காக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் அமைச்சர்களை செலவழிக்கச் சொல்லுங்கள் என்றெல்லாம் பேசிவருகின்றனர். இதனால் தொகுதிகளில் செலவு செய்ய யாரும் முன்வராததால், தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது” என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

பிரசாரம்

தொடர்ந்து, ``கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம் சிகாமணியை எதிர்த்து நிறுத்தப்பட்டிருக்கிறார் எல்.கே.சுதீஷ். தன் மகன் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அவரை வெற்றிபெறச் செய்ய எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் வாரியிறைக்கத் தயாராக இருக்கிறார் பொன்முடி. அவருக்கு டஃப் கொடுக்க சுதீஷ் தரப்பிலும் தயாராகிவருகின்றனர். இதற்கிடையில்தான் எடப்பாடியிடம் பேசியிருக்கிறார் சுதீஷ். `தி.மு.க-வினர் கவுதம் சிகாமணியை வெற்றிபெறச்செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்துவருகின்றனர். நான் உங்களை நம்பித்தான் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடத் துணிந்தேன். ஆனால், இங்கேயிருக்கும் அ.தி.மு.க-வினர் யாரும் எனக்கு சப்போர்ட் பண்றதில்ல. தேர்தல் பணிகளில் அவர்கள் கவனம் காட்றதில்லை. இப்படியே போனால் நிலைமை மோசமாகிடும்’ என்று புலம்பியுள்ளார். சி.வி.சண்முகத்தை அழைத்து, `தேர்தல்ல கூட்டணிக் கட்சிகள் மீது என்னதான் பிரச்னை இருந்தாலும், இப்படி செய்றது சரியில்ல. கட்சிகாரர்களிடம் சுதீஷை ஜெயிக்கவைக்குறதுக்கான வேலைய பார்க்கச் சொல்லுங்க என்றாராம் எடப்பாடி.”