நீச்சல் தெரியாததால் சோகம் - தண்ணீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு! | 3 persons drowned to death near Virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (08/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (08/04/2019)

நீச்சல் தெரியாததால் சோகம் - தண்ணீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே நீச்சல் தெரியாததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி உயிரிழப்பு

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். மில்லில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவரின் மகன் ஹரிஹரன் (14) அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பும், மற்றொரு மகன் ஆதிசேஷன் (10) 5-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில், சிறுவர்களின் தாய்மாமா சோலைமுருகன் (40) என்பவருடன் குல்லூர்சந்தை அணைக்கு மீன் வாங்கச் சென்றனர். அப்போது அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரில் சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்ட ஹரிஹரனும், ஆதிசேஷனும் உள்ளே  இறங்கினர். ஆனால் அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் இருவரும் உள்ளே மூழ்கினர். இதைக் கண்ட சோலைமுருகனும் உள்ளே இறங்கினார். ஆனால், அவருக்கும் நீச்சல் தெரியாததால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டனர். ஆனால், 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. எனவே, அவர்களின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.