`அண்ணன் ஹெச்.ராஜா வெற்றி பெறணும்!'- பால்குடம் சுமந்து 18 கி.மீ பாதயாத்திரை சென்ற பா.ஜ.க பக்தன் | BJP cadre worship god over H Raja's victory

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (08/04/2019)

கடைசி தொடர்பு:18:00 (08/04/2019)

`அண்ணன் ஹெச்.ராஜா வெற்றி பெறணும்!'- பால்குடம் சுமந்து 18 கி.மீ பாதயாத்திரை சென்ற பா.ஜ.க பக்தன்

மீண்டும் மோடி பிரதமராக வேண்டும், சிவகங்கையில் ஹெச்.ராஜா வெற்றிபெற வேண்டும் என நேர்த்திக்கடன் வைத்த புதுக்கோட்டை நெடுவாசலைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவர் 18 கி.மீ தூரம் வரையிலும் பால்குடத்தை தலையில் சுமந்து பாதயாத்திரை சென்றார்.

பாதயாத்திரை சென்ற பாஜக பக்தர்

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகாளீஸ்வரன் (29). பா.ஜ.க-வின் பக்தரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். சிவகங்கையில் ஹெச்.ராஜா வெற்றி பெற வேண்டும் என்று ஆலங்குடி நாடியம்மனிடம் நேர்த்திக்கடன் செய்துள்ளார். நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக, நெடுவாசல் வெள்ளையப்பன் கோயிலுக்கு பால்குடத்துடன் வந்த முத்துகாளீஸ்வரன் தலையில் பால்குடத்தைச் சுமந்து, அத்துடன் பா.ஜ.க கொடியைக் கையில் ஏந்தியபடியே வெள்ளையப்பன் கோயிலில் இருந்து பாதயாத்திரை புறப்பட்டார். கைகாட்டி, மாங்காடு, வடகாடு வழியாக சுமார் 18 கி.மீ வரையிலும் நடந்து நாடியம்மன் கோயிலுக்கு வந்தார். நேர்த்திக்கடன் பால் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து முத்துகாளீஸ்வரனிடம் பேசினோம். `பா.ஜ.க-வின் உறுப்பினர் பதவியில்கூட நான் இல்லை. ஆனாலும், பா.ஜ.க-வின் தீவிர பக்தன். அண்ணன் ஹெச்.ராஜா இந்துக்களை மதிப்பவர். அவர் வெற்றி பெற்றால், நிச்சயம் நம் தொகுதிக்கு நல்லது செய்வார். அவரை மக்கள் ஜெயிக்க வைப்பார்கள். சிவகங்கை தொகுதியில் ஹெச்.ராஜா வெற்றிபெற வேண்டும், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் அதற்காகத்தான் இந்த நேர்த்திக்கடன் எல்லாம். மக்கள் அனைவரும் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கோடும் இதை முன்னெடுத்துள்ளேன்'' என்றார்.