`மீண்டும் மோடி பிரதமரானால்..!'- பெரம்பலூரில் ராஜ்நாத் சிங் அளித்த வாக்குறுதிகள் | Minister Rajnath singh election campaign in Perambalur

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (08/04/2019)

கடைசி தொடர்பு:17:15 (08/04/2019)

`மீண்டும் மோடி பிரதமரானால்..!'- பெரம்பலூரில் ராஜ்நாத் சிங் அளித்த வாக்குறுதிகள்

``காங்கிரஸ்- தி.மு.க., கூட்டணி ஜனநாயக விரோதக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் ஜெயில், பெயிலில் உள்ளவர்கள்தான் உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களின் முகத்திரையை கிழிப்போம்" என்று பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் என்.ஆர் சிவபதியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

                                                பெரம்பலூரில் நடந்த பிரசார கூட்டம்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சிவபதியை ஆதரித்து, பெரம்பலூர் வானொலி திடலில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ``திருக்குறள் நாம் அனைவரையும் ஒருங்கிணைத்து ஓர் உன்னத சக்தியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தமிழ் கலாசாரம், பண்பாடு மிகவும் சிறந்தது. காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பின்கதவு வழியாக உள்ளே வரப்பார்க்கிறது. 356 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆட்சியைக் கலைத்தது காங்கிரஸ் கட்சிதான். 

                                                 அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

தமிழகத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டது தி.மு.க. இவர்கள் ஊழல் கரம் படிந்தவர்கள். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஜனநாயக விரோதக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் ஜெயில், பெயிலில் உள்ளவர்கள்தான் உள்ளனர். ஊழல் வழக்குகள் கொண்ட ஊழல் நிறைந்த கூட்டணியாகும். இந்தக் கூட்டணிக்குச் சிறந்த தலைமை, வழிகாட்டி இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டோம். கூடா நட்பு கேடில் விளைந்தது என்றார் கருணாநிதி. 

மத்திய பா.ஜ.க., அரசு ஒரு சிறந்த அரசு. 2019-ல் மீண்டும் ஆட்சி அமைக்கும். உலகப் பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் இந்தியா பின்தங்கியிருந்தது. ஆனால், நரேந்திர மோடி ஆட்சி ஏற்பட்ட பின் இந்தியா வளர்ச்சியடைந்தது. கடந்த ஆண்டு 6-வது இடத்திலிருந்து தற்போது 5-வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக நிதி மையமும் இந்தியாவின் வளர்ச்சியைப் பாராட்டியுள்ளது. இதன்படி, உலக அளவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம்பெறும். உலக அளவில் இந்திய மதிப்பு மிக்க நாடாக உருமாறி வருகிறது.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடந்த 2008-2014 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித்தரப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ஒரு கோடியே 30 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. 1947 முதல் 2014 வரையில் 40 சதவிகிதம் தான் கழிவறை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. ஆனால், கடந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சியால் 98 சதவிகிதம் கழிவறை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மேலும், 7 கோடியே 14 லட்சம் இலவச சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

                                              அதிமுக கூட்டணி பிரசாரத்தில் பேசும் ராஜ்நாத் சிங்

மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்ததும் வரும் 2022-ல் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு குடிசையில்லா இந்தியாவாக மாறும். அதேபோல் 2022-க்குள் அனைத்து வீடுகளுக்கும் இலவச சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்படும். விவசாயிகள் மீது அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் வரும் 2022-க்கு இரண்டு மடங்கு லாபம் பெறும் வகையில் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும். தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு அதில் முதற்கட்ட தவணை தொகை ரூ. 2,000 அனைவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 42 ராணுவ வீரர்களைத் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். அதற்குப் பதிலடியாக 15 நாள்களுக்குள் பாகிஸ்தான் சென்று அங்குள்ள தீவிரவாத முகாம்களை நாம் அழித்துள்ளோம். நாம் பாகிஸ்தான் மக்களுக்கு எந்தவித தொந்தரவும் தராமல் இறையாண்மையைப் பாதுகாத்துக் கொண்டுள்ளோம். 

                                            ராஜ்நாத் சிங்குக்கு கூட்டணி கட்சியினர் மாலை

பாகிஸ்தான் நாட்டில் அத்துமீறவோ, ஆக்கிரமிப்பு செய்யும் எண்ணமோ நமக்கில்லை. ஆனால், நம்மை அவர்கள் தாக்கினால் நாம் வீடு புகுந்து அவர்களைத் தாக்குவோம். நம்நாடு அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியடைந்து, சேட்லைட் விண்வெளி மூலம் தாக்குதல் நடத்தத் தயாராகவுள்ளோம். நம் நாட்டை யாராவது சேட்லைட் விண்வெளி மூலம் தாக்குதல் நடத்தினால் அதைத் தடுத்து நாமும் தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளோம். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 1,990 தமிழக மீனவர்களை மீட்டுள்ளோம். அதேபோல் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நாம் செய்து கொடுத்துள்ளோம். இலங்கைத் தமிழர்களுக்கு 14,000 வீடுகள் கட்டுக்கொடுத்துள்ளோம். சென்னையில் உள்ள ரயில்வே நிலையத்தில் எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்டியுள்ளோம். ரயில் நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அரியலூரிலிருந்து பெரம்பலூரை இணைக்கும் ரயில்வே போக்குவரத்து வசதிக்கு தற்போது சர்வே பணி நடந்து வருகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல், பெரம்பலூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு நிலுவைத் தொகை பெற்றத்தர நடவடிக்கை எடுக்கப்படும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும்" என்றார்.