முதல்வர் கான்வாயைப் பின்தொடர்ந்த வாகனத்தில் சிக்கிய லட்சங்கள்! - அதிர்ந்த ஊட்டி தேர்தல் அதிகாரிகள் | Election flying squad seize 17 lakhs rupees from van in CM EPS's convoy

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (08/04/2019)

கடைசி தொடர்பு:17:20 (08/04/2019)

முதல்வர் கான்வாயைப் பின்தொடர்ந்த வாகனத்தில் சிக்கிய லட்சங்கள்! - அதிர்ந்த ஊட்டி தேர்தல் அதிகாரிகள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஊட்டி பிரசாரத்தின்போது எல்லநள்ளி அருகே முதல்வர் காரை பின்தொடர்ந்து வந்த காரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ.17 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் தேர்தல் அதிகாரிகள்

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து இன்று நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக குன்னூரில் பிரசாரத்தை முடித்து ஊட்டியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக அவரது வாகனம், கான்வாய் வாகனம் முன்செல்ல ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, ஊட்டி - குன்னூர் சாலையில் எல்லநள்ளி பகுதியில் முதலமைச்சர் வாகனத்தைப் பின்தொடர்ந்து ஒரு வாகனம் வந்த வண்ணம் இருந்தது. அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக ரூ.17 லட்சத்து 11 ஆயிரத்து 583 பணம் இருந்தது தெரியவந்தது. வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்துள்ளனர். 

பணத்துக்கான ஆவணங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எவ்வித ஆவணங்களும் இல்லாத நிலையில், அந்தப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாக உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும் ஊட்டி ஆர்.டி.ஓ-வுமான சுரேஷ் கூறுகையில், ``முதலமைச்சர் கான்வாயைப் பின் தொடர்ந்து ஒரு வாகனம் வந்தது. அந்த வாகனத்தைச் சோதனை செய்தபோது, அதில் ரூ.17 லட்சம் பணம் இருந்துள்ளது. அந்த வாகனம் எல்லநள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது என அதில் வந்தவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்கள் சமர்ப்பித்தால் மட்டுமே திரும்ப வழங்கப்படும்'' என்றார்.

முதலமைச்சர் கான்வாயில் வந்த வாகனம் ஒன்றில் ரூ.15 லட்சம் பிடிபட்ட சம்பவம் ஊட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.