`மக்களின் மனநிலையை அறிந்து செயல்படுங்கள்!'- 8 வழிச் சாலை தீர்ப்பு குறித்து திருமாவளவன் | VCK Chief Thirumavalavan slams ADMK government over salem - chennai expressway project

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (08/04/2019)

கடைசி தொடர்பு:19:20 (08/04/2019)

`மக்களின் மனநிலையை அறிந்து செயல்படுங்கள்!'- 8 வழிச் சாலை தீர்ப்பு குறித்து திருமாவளவன்

``8 வழிச் சாலை திட்டத்திற்கான அரசாணை ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. மக்களின் மனநிலையை அறிந்து அரசியல்வாதிகள் செயல்படவேண்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

                                                      திருமாவளவன்

 

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அரியலூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கோவிந்த புரம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி அமைக்கப்பட உள்ள 8 வழிச் சாலை திட்டத்திற்கான தமிழக அரசின் அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. 

                                                8 வழி சாலைக்காக போடப்பட்ட கற்கள்

இந்த உத்தரவு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மக்களின் கருத்துக்களை அறியாமல் மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டுவந்தால் மக்களின் நலன்களைப் பாதிப்பதோடு இல்லாமல் எதிர்காலச் சந்ததியினரின் நலன்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் மலைகள் மற்றும் அரியவகை மரங்கள் பாதுகாக்கப்படும். எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகே திட்டங்களைத் தொடங்க வேண்டும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. 

                                                  8 வழிசாலை எதிர்த்து போராடிய விவசாயிகள்

தேர்தலில் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில் மத்திய அரசு வருமானவரித் துறையைப் பயன்படுத்தி வருகின்றது. இது கண்டிக்கத்தக்கது. இதுவரையில் ஆளும் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீட்டில் வருமான வரித்துறை சோதனையிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வருமான வரித்துறையைக் கொண்டு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்திப் பயனடைய பா.ஜ.க அரசு முயல்கிறது" என்று குற்றம்சாட்டினார்.