ஆரத்திக்கு 500... ஓட்டுக்கு 5000? - ரவீந்திரநாத் குமாரை கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள்! | theni admk candidate ravindranath team gave 500 for public

வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (08/04/2019)

கடைசி தொடர்பு:18:04 (08/04/2019)

ஆரத்திக்கு 500... ஓட்டுக்கு 5000? - ரவீந்திரநாத் குமாரை கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள்!

தேனி நாடாளுமன்ற அ.தி.மு.க உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், பிரசாரத்தின்போது ஆரத்தி எடுக்க ஒருவருக்கு ஐந்நூறு ரூபாய் கொடுப்பதை மக்களே உறுதிசெய்திருக்கிறார்கள்.

ரவீந்திரநாத் குமார்

2019 நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அ.தி.மு.க சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். தினகரனின் அ.ம.மு.க சார்பில் தங்க.தமிழ்ச்செல்வனும், தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் போட்டியிடுகிறார். தேனி தொகுதியைப் பொறுத்தவரை மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால் ரவீந்திரநாத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

ஆரத்தி எடுக்க பணம் - டோக்கன்

இவர் பிரசாரம் செய்யச்செல்லும் இடத்திலெல்லாம், அவருக்கு ஆரத்தி எடுக்க நீண்ட வரிசையில் மக்கள் நேரம் காலம் பார்க்காமல் நிற்கவைக்கப்படுகிறார்கள். அங்கிருந்த மக்களிடம், விகடன் செய்தியாளர் விசாரித்தபோது, ஆரத்தி எடுக்க ஐந்நூறு ரூபாய் கொடுப்பதாகவும், அதற்கு டோக்கன் கொடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். கிட்டத்தட்ட பதினெட்டு கிராம மக்கள், ஆரத்தி எடுப்பதற்காகவே அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். அந்த டோக்கனில் இரட்டை இலைச் சின்னம் அச்சிடப்பட்டிருக்கிறது. `ஆரத்திக்கு ஐந்நூறு ரூபாய் கொடுப்பவர், தான் ஜெயிக்க ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் வரை கொடுப்பார்' என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.