`பா.ஜ.க. ஒருபோதும் ராமர்கோயில் கட்டாது; நாங்கள் கட்டுவோம்!' - கே.எஸ்.அழகிரி பேச்சு | Congress will built ram temple, says TNCC president KS Alagiri

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (08/04/2019)

கடைசி தொடர்பு:20:03 (08/04/2019)

`பா.ஜ.க. ஒருபோதும் ராமர்கோயில் கட்டாது; நாங்கள் கட்டுவோம்!' - கே.எஸ்.அழகிரி பேச்சு

`பா.ஜ.க-வினர் ஒருபோதும் ராமர்கோயில் கட்டமாட்டார்கள். கட்டினால் பா.ஜ.க. முடிந்துவிடும். நாங்கள் ராமர் கோயில் கட்டுவோம்' என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிவாய்பு நாளுக்கு நாள் பிரகாசமாக உள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 25 கோடி மக்களுக்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டம் வறுமையைப் போக்கும். ஆண்டுக்கு 72,000 ரூபாய் உதவித் திட்டம் வறுமை நிலையில் இருக்கும் மக்களை வறுமையின் பிடியிலிருந்து அகற்றிவிடும். 2030-ம் ஆண்டு இந்தியாவில் வறுமை இருக்காது. இது முடியுமா எனக் கேட்கிறார்கள். 230 கோடி ரூபாய் வருமானம் நம் நாட்டுக்கு வருகிறது. அதில் முன்றரை லட்சம் கோடியை இலவசமாக கொடுக்க முடியும். இலவசம் என்பது சோம்பேறி ஆக்கிவிடும் என்பது தவறான சிந்தனை. மக்களின் அடிப்படைத் தேவைக்காகத்தான் 6,000 ரூபாய் கொடுக்கிறோம். மக்கள் ஒவ்வொரு தேவைக்காகவும் கடினமாக உழைக்கிறார்கள். `நாடு, பிரதமர் மோடி கையில் பத்திரமாக இருக்கும்' என அமித் ஷா சொல்கிறார். ரஃபேல் பேர ஊழல்களில் ராணுவக் கோப்புகள் காணாமல் போய்விட்டன. ராமர் நமக்கு கடவுள். இந்தியாவின் அனைத்து இந்துக்களுக்கும் ராமனையும், கிருஷ்ணனையும் பிடிக்கும்.

கே.எஸ்.அழகிரி

காந்தி ராமபக்தர். அவர் தனது இதயத்தில் கோயில் கட்டினார். முஸ்லிம்களின் இடத்தில் கட்டவில்லை. 400 ஆண்டுக்கு முன்பு ஒரு காட்டுமிராண்டி கும்பல் ராமர்கோயிலை இடித்துவிட்டு முஸ்லிம் பள்ளி கட்டினார்கள் என்கிறார்கள். நாகரிகம் பெற்ற இந்தக் காலகட்டத்தில் அதே காட்டுமிராண்டித் தனத்தைப் போன்று பள்ளியை இடித்து கோயில் கட்டுவோம் என்பது என்ன நியாயம். பா.ஜ.க-வினர் ஒருபோதும் ராமர்கோயில் கட்டமாட்டார்கள். கட்டினால் பா.ஜ.க. முடிந்துவிடும். நாங்கள் ராமர்கோயில் கட்டுவோம். அதிலும் பிரச்னைக்குரிய இடத்தில் அல்லாமல் பொது இடத்தில் கட்டுவோம்.

இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடாக இருக்கும் எனச் சொன்னவர் மகாத்மா காந்தி. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ராமர் கோயிலைக் காட்டி இந்தியாவை பயமுறுத்துகிறது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை என்னவென்று அவர்களுக்கே தெரியாது. யாராவது அச்சடித்துக் கொடுத்ததை வெளியிட்டிருப்பார்கள். ஜி.எஸ்.டி.யின் தாயகம் காங்கிரஸ்தான். ராகுலும், மன்மோகன்சிங்கும் நாடாளுமன்றத்தில் சட்ட வடிவம் கொண்டுவந்தபோது பா.ஜ.க. எதிர்த்தது. எங்கள் ஜி.எஸ்.டி.யில் 18 சதவிகிதத்துக்கு அதிகம் இருக்கக்கூடாது என்றோம். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர வேண்டும் என்றோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவோம்.

நாகர்கோவிலில் பா.ஜ.க. டோக்கன் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. டோக்கன் குறித்து முழு விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். எங்களுக்கும் பா.ஜ.க.-வுக்கும் அடிப்படையாக ஒரு வேறுபாடு உண்டு. அதிகார பரவலில் நம்பிக்கை கொண்ட கட்சி காங்கிரஸ். ஒற்றை அதிகாரம் இருக்க வேண்டும் என்பது பா.ஜ.க. கொள்கை.

பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது என்ன உணர்ச்சியில் இருந்தோமோ அதே உணர்வில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையையும் பார்க்கிறேன். பண விநியோகத்தை தடுத்து நிறுத்துங்கள் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கிறோம். பா.ஜ.க. மீது துல்லிய தாக்குதல் நடத்துபவர் ப.சிதம்பரம். அதனால்தான் மோடி அரசு அவர்மீது ஆதாரம் இல்லாமல் வழக்குகளைப் போட்டுவருகிறது. வரும் 12-ம் தேதி ராகுல் தமிழகத்தில் நான்கு இடங்களில் பிரசாரம் செய்கிறார். எந்த இடங்கள் என்று முடிவாகவில்லை" என்றார்.