`கொடநாடு விவகாரத்தில் முதல்வரும், ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடவேண்டாம்!’ - உயர்நீதிமன்றம் அறிவுரை | cm and stalin don't involved in personal attack regarding Kodanad issue madras hc advice

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (08/04/2019)

கடைசி தொடர்பு:20:15 (08/04/2019)

`கொடநாடு விவகாரத்தில் முதல்வரும், ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடவேண்டாம்!’ - உயர்நீதிமன்றம் அறிவுரை

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க தலைவர் ஸ்டாலினும் பரஸ்பரம் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேசியதாக தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரத்தை தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

எடப்பாடி பழனிசாமி

அப்போது, இதுவரை ஸ்டாலின் பேசிய கூட்டங்களில் வீடியோ ஆதாரங்களை அரசுத்தரப்பு தாக்கல் செய்ததுடன், மொபைல் போனிலும் போட்டுக் காட்டப்பட்டது.  இதையடுத்து,  நீலகிரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து பேசக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `கொடநாடு குறித்து தொடர்ந்து பேசினால் வாயை உடைப்பேன்’ என முதல்வர் பேசியதாகத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, கொடநாடு விவகாரம் தொடர்பாக பரஸ்பரம் முதல்வரும், ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி விசாரணையை புதன்கிழமைக்குத் தள்ளிவைத்தார்.