எம்.பி ஆகப்போவது யாரு... என்ன சொல்லுது ஊரு? - 40 தொகுதிகளின் ‘நச்’ நிலவரம்... நாளையே (9.4.2019) வெளியாகிறது ஜூ.வி | jv election results

வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (08/04/2019)

கடைசி தொடர்பு:20:39 (08/04/2019)

எம்.பி ஆகப்போவது யாரு... என்ன சொல்லுது ஊரு? - 40 தொகுதிகளின் ‘நச்’ நிலவரம்... நாளையே (9.4.2019) வெளியாகிறது ஜூ.வி

இந்தக் கணிப்பு விவரங்களைத் தாங்கிய ஜூ.வி இதழுக்காக தயாராகக் காத்திருக்கின்றனர். அவர்களுடைய ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில், வழக்கத்தைவிட ஒரு நாள் முன்னதாக, அதாவது நாளை செவ்வாய்க் கிழமையே (9.4.2019)  வெளியாகிறது ஜூ.வி.

'இந்திய தேசத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப்போவது யார்?' என்கிற விவாதம், நாடு முழுக்கவும் சூடுபறக்கிறது. இந்த நிலையில், ஜூனியர் விகடன் சார்பில் கடந்த இரு வாரங்களாகக் களத்தில் சுழன்ற நிருபர் படை 40 தொகுதிகளின் நிலவரத்தை 'நச்' என்று கணித்துள்ளது. வழக்கம்போல, ஜூ.வி வாசகர்கள், அரசியல்கட்சியினர், பொதுமக்கள் என்று பலரும் பெரும் எதிர்பார்ப்போடு இந்தக் கணிப்பு விவரங்களைத் தாங்கிய ஜூ.வி இதழுக்காக தயாராகக் காத்திருக்கின்றனர். அவர்களுடைய ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில், வழக்கத்தைவிட ஒரு நாள் முன்னதாக, அதாவது நாளை செவ்வாய்க் கிழமையே (9.4.2019)  வெளியாகிறது ஜூ.வி.
 

தொகுதி நிலவரம்

எந்தத் தொகுதியில் எந்தக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றிமாலை சூடுவார் என்பதைக் கணிப்பதற்கு முன், பலவிதமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்துள்ளது ஜூ.வி. செய்தியாளர் படை. இதற்காகக் களத்தில் சுற்றிவந்தபோது கிடைத்த பல்வேறு விஷயங்கள், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை! முன்னெப்போதும் இல்லாத அளவில், இந்தத் தேர்தலில் இருபெரும் கூட்டணிகள் மோதுகின்றன. கடந்த 2014 தேர்தலின்போது, தைரியமாகத் தனித்து நின்று 37 தொகுதிகளில் வெற்றிவாகை சூடி, நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்ற மாபெரும் அந்தஸ்தை அ.தி.மு.க-வுக்கு வாங்கித்தந்தார் ஜெயலலிதா. அவர் இல்லாமல் அ.தி.மு.க சந்திக்கும் முதல் தேர்தல் இது. ஆளுமையும், வசீகரமும் உள்ள தலைமையும், கடந்த தேர்தலைப் போல, மத்திய அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வாய்ப்பும் இப்போது அ.தி.மு.க-வுக்கு இல்லை. அதேபோன்று, யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தி, அவரைக் கட்சியின் செலவிலும், தனது செல்வாக்கிலும் ஜெயிக்கவைப்பார் ஜெயலலிதா. அதற்கும் இந்தத் தேர்தலில் வாய்ப்பின்றிப் போய்விட்டது. வசதி படைத்தவர்கள் அல்லது வாரிசுகளுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றோடு, மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும்கட்சிகளாகவுள்ள இரு கட்சிகளும் கைகோத்திருப்பதால், அரசுகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தியும் இந்தக் கூட்டணிக்கு மிகப்பெரிய மிரட்டலாக இருக்கிறது. 

தி.மு.க-வைப் பொறுத்தவரை கருணாநிதி மறைவுக்குப் பின் சந்திக்கும் முதல் தேர்தல், மு.க. ஸ்டாலின் தலைமைப் பண்பில் உள்ள குறைபாடுகள், வசதி படைத்தவர் அல்லது வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கியது, கட்சியை வைத்து கோடி கோடியாகச் சம்பாதித்த பலரும் தேர்தல் நேரத்தில் கையைக் கட்டிக்கொண்டு ஒதுங்கி நிற்பது, ஆளும்கட்சியினரிடம் விலைபோகும் கட்சி நிர்வாகிகள் என தி.மு.க-வின் பலவீனமும் பட்டியலிடப்படுகிறது. அதேசமயம், மத்திய மாநில அரசுகள் மற்றும் ஆளும்கட்சிகள் மீதான அதிருப்திகளை, நன்றாக அறுவடை செய்யப்பார்க்கின்றன தி.மு.க கூட்டணிக் கட்சிகள். 
 

தொகுதி நிலவரம்

தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் டி.டி.வி.தினகரனுக்கு இருக்கும் ஆதரவு, யோசிக்க வைக்கும் அளவில் இருக்கிறது. பெரும்பாலான தொகுதிகளில், அ.தி.மு.க வுக்கு பீதியை உருவாக்கும் அளவில் இருக்கிறது தினகரனின் அ.ம.மு.க. 
அ.தி.மு.க மற்றும் தி.மு.க. ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் மீது இளம்வாக்காளர்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இத்தகையோரின் வாக்குகளை அள்ளிக்கொள்வதில் போட்டி போடுகின்றன நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள். முதல்தலைமுறை வாக்காளர்களில் பெருவாரியானவர்களின் நம்பிக்கை நாயகனாகக் கமல் தெரிகிறார். கடந்த முறை சீமானுக்கு இந்த இளைய வட்டத்தில் இருந்ததுபோன்ற வரவேற்பு, கமலுக்கு இருக்கிறது. 

ஆகக்கூடி, ஐந்து முனைப்போட்டி என்று சொல்லப்பட்டாலும், ஒன்றிரண்டு தொகுதிகளைத் தவிர, அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி இடையேதான் போட்டி இருக்கிறது. பணம் இந்தத் தேர்தலில் பெரிய வேலை பார்க்கும் என்பதை மறுக்கமுடியாது என்றாலும், அதனால் வெற்றியை எளிதில் வாங்கிவிட முடியாது என்கிற அளவில்தான் மக்களின் மனநிலை இருக்கிறது.
நிருபர்களின் களப்பணி, அரசியல்வல்லுநர்களின் அபிப்பிராயம், பொதுமக்களின் கருத்து, வாக்குவங்கிகள் குறித்த கணக்கு, கடந்தகால தேர்தல்களின் வெற்றி/தோல்வி எனப் பல விஷயங்களையும் கருத்தில்கொண்டே, எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி ஜெயிக்கும் என்பது கணிக்கப்பட்டுள்ளது. மிகக்குறைவான தொகுதிகளில், கணிக்கவே முடியாத அளவில் இழுபறி பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால், ‘நச்’ நிலவரம், கச்சிதமாகவே இருக்குமென்ற நம்பிக்கை, நிறையவே இருக்கிறது. மொத்தத்தில் மக்களின் மனநிலையை ஜூனியர் விகடன் அப்படியே பிரதிபலித்திருப்பதாகவே தோன்றுகிறது. 

வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு... நாளையே சொல்லிவிடும் ஜூ.வி!.