`ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திப் பேசுவது சரியல்ல!' - சி.பி.ஐ தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி | CPI releases election manifesto

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (08/04/2019)

கடைசி தொடர்பு:21:40 (08/04/2019)

`ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திப் பேசுவது சரியல்ல!' - சி.பி.ஐ தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து, அக்கட்சியின் தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி இன்று திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தநிலையில் முன்னதாக இன்று திருப்பூர் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை சுதாகர் ரெட்டி வெளியிட்டார்.

சுதாகர் ரெட்டி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி, ``கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துவிட்டது. ஜி.எஸ்.டி, பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. இந்தியாவில் மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டில்போய் பதுங்கியிருக்கும் அனைவரும் மோடியின் நண்பர்களே. தேர்தல் ஆணையம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் விதிமுறைகளை மீறிய மோடி, யோகி ஆதித்யநாத் போன்ற பா.ஜ.கவினர் மீது மட்டும் தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

பால்கோட் தாக்குதல் குறித்த ஆதாரங்கள் வேண்டுமென ராணுவத்திடம் நாங்கள் கேட்கவில்லை. ஆனால், தாக்குதலின்போது இத்தனை பேர் உயிரிழந்ததாக அமித் ஷா கூறியதுதான் எப்படி எனக் கேள்வி எழுப்புகிறோம். அமித் ஷா தான் இந்திய ராணுவத்துக்கே தலைமையா?. பா.ஜ.கவின் மிரட்டலுக்கு தமிழகத்தில் அ.தி.மு.க அடிபணிந்துவிட்டதன் மூலம் அதுவொரு முதுகெலும்பு அற்ற கட்சி என்பது உறுதியாகிறது.

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் வெற்றிபெறும். அதேசமயம் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுவது தவறான செயல். அதன்மூலம் அவர் பா.ஜ.கவுக்கு எதிரானவரா அல்லது இடதுசாரிகளுக்கு எதிரானவரா என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்படும். அதேபோல பல கூட்டணிக் கட்சிகள் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திப் பேசுவதும் சரியல்ல. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 - ம் தேதிக்குப் பிறகே கூட்டணிக் கட்சிகள் அதைப்பற்றி முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.