`அறிக்கை தாக்கல் செய்த சி.பி.சி.ஐ.டி!' - முகிலன் ஆட்கொணர்வு மனு விசாரணை ஜூன் 6-க்கு ஒத்திவைப்பு | Mugilan hapeas corpus petition adjourned to june 6

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (08/04/2019)

கடைசி தொடர்பு:20:58 (08/04/2019)

`அறிக்கை தாக்கல் செய்த சி.பி.சி.ஐ.டி!' - முகிலன் ஆட்கொணர்வு மனு விசாரணை ஜூன் 6-க்கு ஒத்திவைப்பு

சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனது தொடர்பாக தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் காவல் துறை விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை சீல் செய்யப்பட்ட கவரில் தாக்கல் செய்தார். அதில், முகிலன் வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்த காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் கர்நாடகம் மற்றும் கேரளாவிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

முகிலன்

மேலும் ஸ்டெர்லைட் போராட்டம், மணல் கொள்ளை எதிர்ப்பு போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டவர்களிடமும் அனைத்து கோணங்களிலும் முழு வீச்சுடன் காவல் துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். மனுதாரரான மக்கள் கண்காணிப்பகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் அடுத்து வாதிட்டார். காவல் துறையினர் நிலை அறிக்கையை மனுதாரரிடம் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார். முகிலனின் அலைபேசி தொடர்பான தகவல்களை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

சுதா ராமலிங்கம்

அலைபேசி தொடர்பான தகவல்களை மனுதாரரே நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அலைபேசி தொடர்பாக அரசுத் தரப்பில் கூறப்பட்ட நேரத்திற்குப் பிறகும் கூட முகிலனின் அலைபேசி செயல்பாட்டில் இருந்ததாகவும் அவரின் நண்பருக்குத் தகவல்களை பரிமாறியதாகவும் தெரிவித்தார். மற்ற கோணங்களிலும் காவல் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரினார். மனுதாரர் முன்வைத்துள்ள வாதங்களின் அடிப்படையில் விசாரித்துக் காவல் துறையினர் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.