`பா.ஜ.க தேர்தல் அறிக்கை நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதுபோல இருக்கிறது!' - கே.பாலகிருஷ்ணன் | K Balakrishnan slams BJP's election manifesto

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (08/04/2019)

கடைசி தொடர்பு:21:50 (08/04/2019)

`பா.ஜ.க தேர்தல் அறிக்கை நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதுபோல இருக்கிறது!' - கே.பாலகிருஷ்ணன்

``பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் அறிக்கையாக இருக்கிறது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க தான் இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்க்கிறது. மோடி ஆட்சி நீடித்தால் இந்தியாவிற்கே அச்சுறுத்தல் ஏற்படும். விவசாயிகள், வியாபாரிகள், முதலாளிகள், மாணவர்கள், கிராமப்புற மக்கள் யாருக்கும் ஏற்புடைய தேர்தல் அறிக்கை அல்ல'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  

தேர்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று சேலம் வந்திருந்தார். சேலம் ராமகிருஷ்ணா பார்க் அருகே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில், ``8 வழிச் சாலை தீர்ப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை தொடர்பாக சந்திக்க வந்திருக்கிறேன். 8 வழி பசுமைச் சாலை திட்டம் அறிவித்ததிலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்துவந்தது. பசுமைச் சாலைத் திட்டத்தால் விவசாய நிலம், கிணறுகள், மலைகள், வன உயிரினங்கள் பாதிக்கப்படும் எனப் பல போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் ஆளும் அ.தி.மு.க அரசு எங்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

விவசாயிகளை அடித்து மிரட்டியும், பெண்களை அவமானப்படுத்தியும் அராஜகம் செய்தும் விளை நிலங்களில் முட்டுக்கற்கள் நட்டு நிலங்களைக் கையகப்படுத்தினார்கள். தற்போது உயர்நீதிமன்றத்தில் 8 வழிச் சாலைக்கு நிரந்தர தடை விதித்திருப்பது வரவேற்கதக்கது. 

இன்றைய தினம் பாரதிய ஜனதா கட்சி 45 பக்கங்களுக்குத் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்தத் தேர்தல் அறிக்கையைப் படித்து பார்க்கும் போது இந்தியாவைச் சீரழிக்கும் தேர்தல் அறிக்கையாகவும், மக்களின் தேவையை பூர்த்தி செய்யாத வெற்று அறிக்கையாக இருக்கிறது. நீட் தேர்வை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் அ.தி.மு.க., பா.ம.க போன்ற கட்சிகள் தமிழகத்திற்கு விலக்கு கேட்போம் என்று குறிப்பிடுகிறார்கள். இது யாரை ஏமாற்றும் செயல்.

மொத்தத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் அறிக்கையாக இருக்கிறது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க தான் இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்க்கிறது. மோடி ஆட்சி நீடித்தால் இந்தியாவிற்கே அச்சுறுத்தல் ஏற்படும். விவசாயிகள், வியாபாரிகள், முதலாளிகள், மாணவர்கள், கிராமப்புற மக்கள் யாருக்கும் ஏற்புடைய தேர்தல் அறிக்கை அல்ல.

அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி வேறு கொள்கை வேறு என்றால் பிறகு எதற்காகக் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். கொள்ளை அடிப்பதற்காகவா?. சுயத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கா?. மோடியோடு இவர்கள் எதற்காகக் கூட்டணி வைத்தார்கள். நீட் தேர்வை ரத்து செய்ததற்காகவா, மேக்கே தாட்டூ  அணை கட்டுவதை தடுத்ததற்காகவா, சட்டசபைகளில் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்ததற்காகவா, கஜா புயலுக்கு நிவாரணம் வழங்கியதற்காகவா சுயநலத்திற்காகவே கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

தற்போது தேர்தல் வந்ததும் பிரதமர் மோடி, தமிழ் மூத்த மொழி என்கிறார். அப்படியானால் தமிழை தேசிய மொழியாக அங்கீகாரம் வழங்குவாரா?. பா.ம.க வைப் போன்று நாங்கள் சாதி மோதலை ஏற்படுத்தி அரசியல் செய்ய மாட்டோம். தேர்தல் விதிமுறையை மீறி வாக்குச் சாவடிகளில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். நாம் மட்டும்தான் இருப்போம். என்று சூசகமாகக் கூறி வாக்குச் சாவடிகளை கைப்பற்ற வேண்டும் என்பது போல பேசுகிறார் அன்புமணி. அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். தேர்தலுக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இல்லை. அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைத்திருப்பது அரசியலுக்காக உடைத்திருக்கிறார்கள். உடைத்தவர் மீது தேர்தல் ஆணையம் உடனே அவர்களைக் கைது செய்ய வேண்டும்'' என்றார்.