ஜெயிக்கப்போவது எந்தக் கட்சி? தொடருமா... கவிழுமா ஆட்சி? - 18 சட்டமன்றத் தொகுதிகளின் ‘பல்ஸ்’! - ஜூ.வி சர்வே ஸ்பெஷல் நாளை (9.4.2019) ரிலீஸ் | jv election results

வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (08/04/2019)

கடைசி தொடர்பு:20:48 (08/04/2019)

ஜெயிக்கப்போவது எந்தக் கட்சி? தொடருமா... கவிழுமா ஆட்சி? - 18 சட்டமன்றத் தொகுதிகளின் ‘பல்ஸ்’! - ஜூ.வி சர்வே ஸ்பெஷல் நாளை (9.4.2019) ரிலீஸ்

40 பெரிதா, 18 பெரிதா என்று எல்.கே.ஜி. குழந்தையிடம் கேட்டாலும் 40 (தொகுதி) என்றுதான் சொல்லும்; எடப்பாடியிடம் கேட்டால் 18 (தொகுதி) தான் பெரிது என்றுதான் சொல்லுவார். இன்றைய நிலையில், தமிழகத்தின் டிசைனும், எடப்பாடியின் விஷனும் அப்படித்தான் இருக்கின்றன. நாடெங்கும் அடுத்த பிரதமர் யார் என்று எதிர்பார்த்துள்ள நிலையில், மே 23 க்குப் பின் தமிழகத்தின் முதல்வர் யார் என்ற கேள்விதான், பல கோடித் தமிழர்களைப் பரபரப்படைய வைத்திருக்கும் கேள்வியாக இருக்கிறது. 

இருக்கின்ற 234 சட்டமன்றத் தொகுதிகளில், 22 இடங்கள் காலியாய் இருக்கின்றன. அத்தனைக்கும் மொத்தமாய் தேர்தலை நடத்தியிருக்கலாம். ஆனால், அரசியல்வாதிகளை மிஞ்சுகிற அரசியலைச் செய்து, நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலை நாசூக்காய் தள்ளிவைத்து விட்டது  தேர்தல் ஆணையம். இப்போது நடப்பது 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மட்டுமே. ஆனால், இந்தத் தேர்தலின் முடிவுகளிலேயே மாநிலத்தில் நடக்கும் ஆட்சியும் முடிவுக்கு வந்துவிடும் வாய்ப்புள்ளது என்பதுதான் பரபரப்பு கிளப்பும் பட்டாசு.

தொகுதி

கடந்த 2016-ல் இந்த 18 தொகுதிகளில் 17 தொகுதிகளில் அ.தி.மு.க-தான் வென்றிருக்கிறது. ஒரு தொகுதி, தி.மு.க-வினுடையது. அந்த வகையில் பார்த்தால், மீண்டும் அந்தக் கட்சிதான் ஜெயிக்க வேண்டும். ஆனால், அப்போது இரட்டை இலையைக் காட்டி வாக்கு கேட்ட ஜெயலலிதா இன்றில்லை. ஜெயித்த எம்.எல்.ஏ–க்களும் அ.தி.மு.க–வில் இல்லை. அப்போதிருந்த அ.தி.மு.க–வும் இப்போது இல்லை. டி.டி.வி. தினகரன் தலைமையில், கட்சியிலிருந்து பலரும் பிரிந்து சென்றிருப்பதால் 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க–வுக்கு இருந்த வாக்குவங்கியும் இப்போது செல்லுபடியாகாது. 

ஆனால், அன்றைக்குக் கூட்டணியில் இல்லாத பி.ஜே.பி–யும், பா.ம.க–வும், தே.மு.தி.க–வும் அ.தி.மு.க–வுடன் கரம் கோத்துள்ளன. தி.மு.க கூட்டணியில் காங்கிரசுடன் சேர்த்து கம்யூனிஸ்ட்களும் இணைந்திருக்கின்றனர். கூட்டணிக்கட்சிகள் பலவும் சேர்ந்து பலம் சேர்த்திருந்தாலும், இரண்டு கட்சிகளுக்கும் இடையில்தான் ஆட்சியைப் பிடிக்கும் போட்டி நடக்கிறது. அதனால், இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்களே நேரடியாக மோதுகின்றனர். அதனால் எல்லா இடங்களிலும் போட்டி கடுமையாக இருக்கிறது.

தொகுதி

இப்படிப்பட்ட சூழலில்தான், 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கும் பொருட்டு, மாபெரும் `சர்வே’யை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளது ஜூனியர் விகடன். இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளிலும், பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களை ஜூனியர் விகடன் நிருபர் படை நேரில் சந்தித்து, 10,472 படிவங்களைப் பூர்த்தி செய்ய வைத்து, அவர்களின் கருத்தை அறிந்துள்ளது. மொத்தம் ஒன்பது கேள்விகள் கேட்கப்பட்டு, சுதந்திரமான முறையில் அவர்கள் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. முரண்பாடாகவும், விளையாட்டாகவும் பதில் தரப்பட்டுள்ள 899 படிவங்கள், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தெளிவான தகவல்களுடன் இருக்கும் 9573 படிவங்களில் கிடைத்துள்ள பதில்களே, இந்த இடைத்தேர்தலின் முடிவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தல் முடிவுகள் யாராலும் யூகிக்க முடியாதவை. தகவலைப் பதிவு செய்த நபர்களின் அலைபேசி எண்களை வைத்து, பரவலாக `கிராஸ் செக்’ செய்தபோதும் வந்துள்ள தகவல்கள் உண்மையானவை என்பது உறுதியானது. 

சாதி, செல்வம், செல்வாக்கு, பிரியும் வாக்குகள், உள்ளூர்ப் பிரச்னைகள், ஆட்சிகளின் மீதான அதிருப்தி, விவசாயம், தொழில் பாதிப்பு எனப் பல்வேறு காரணிகளும் இந்த முடிவை மொத்தமாய் எழுதியிருக்கின்றன. இதை மாற்றி எழுதும் சக்தி, பணத்துக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், இன்றைய நிலையில் 18 சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களின் மனநிலையைத்தான் ஜூ.வி. சர்வே முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

ஜூ.வி. சர்வே முடிவை...நாளை காலையிலேயே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்காக...செவ்வாய்க்கிழமையன்றே விற்பனைக்கு வருகிறது ஜூனியர் விகடன்.