`எங்களுக்கு எவ்வளவு பேர் வாக்களித்தீர்கள் எனத் தெரிந்துவிடும்!' - மீனவர்களை மிரள வைத்த மணிகண்டன் | Minister Manikandan allegedly threatens fishermen

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (08/04/2019)

கடைசி தொடர்பு:22:00 (08/04/2019)

`எங்களுக்கு எவ்வளவு பேர் வாக்களித்தீர்கள் எனத் தெரிந்துவிடும்!' - மீனவர்களை மிரள வைத்த மணிகண்டன்

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் மணிகண்டன், `உங்கள் பகுதியில் எங்களுக்கு எவ்வளவு பேர் ஓட்டு போட்டீர்கள் எனக் கண்டு பிடித்து விடுவோம்' எனக் கூறியதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தங்கச்சிமடம் மீனவர்களிடையே பிரசாரம் செய்த அமைச்சர் மணிகண்டன்

பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தங்கச்சிமடம் பகுதியில் அமைச்சர் மணிகண்டன், தற்போதைய எம்.பி அன்வர்ராஜா ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தங்கச்சிமடம் மீனவர்களிடையே தாமரைக்கு வாக்கு அளிக்கக் கோரி பிரசாரம் செய்த அமைச்சர் மணிகண்டன், ``தமிழக மீனவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. மீன்பிடி தடைக் காலத்தில் ரூ.5 ஆயிரம், புயல் காலங்களில் ரூ.5 ஆயிரம், மானிய விலையில் டீசல் என ஏராளமான உதவிகள் வழங்குகிறோம்.

ராமேஸ்வரம் தீவில் உள்ள மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்படையினரால் அழிந்து போனதற்காக 95 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கியுள்ளோம். இன்னும் என்னவெல்லாம் தேவையோ அவற்றையும் செய்து கொடுக்கத் தயாராக உள்ளோம். எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் நீங்கள் இம்முறை மாறுபட்டு இருக்கலாம். ஆனால், இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் நேர்மையானவர், அன்பானவர், தங்கமானவர். அவர் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்.  

அம்மா இல்லாத நிலையில் மத்திய அரசின் உதவியின்றி இலங்கை அரசிடமிருந்து எங்களால் எதுவும் செய்து தர முடியாது. ஆனால் அந்தப் பணிகளை எல்லாம் நயினார் நாகேந்திரன் செய்து தர முடியும். அதற்குக் காரணம் அவர் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் நெருங்கிய நண்பர். அவர் வீட்டில் உணவு அருந்தும் வகையில் நெருக்கமுடையவர். எனவே, அவரை அவர் சார்ந்திருக்கும் கட்சியாகப் பார்க்காமல் தனி மனிதனாகப் பாருங்கள். அவர் ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற தங்கம். மற்றவர்கள் எல்லாம் வேஸ்ட். எனவே சுயேச்சைகளுக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணடிக்காதீர்கள்.

எனது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தங்கச்சிமடத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திலும் எவ்வளவு வாக்குப் பதிவானது. அதில் எங்களுக்கு எவ்வளவு பேர் வாக்களித்தீர்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் அதிக வாக்கு அளித்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார். எனவே நயினார் நாகேந்திரனுக்கு வாக்களியுங்கள்'' என்றார்.

வாக்கு கேட்க வந்த இடத்தில் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசி தாமரைக்கு வாக்கு கேட்ட அமைச்சர் மணிகண்டனின் செயலைக் கண்டு மீனவர்கள் மட்டுமல்ல அவரது கட்சியினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.