`பாயின்ட் டு பாயின்ட் பேருந்து போல தேர்தல் டு தேர்தல் மக்களை சந்திப்பவர்தான் தம்பிதுரை!' - செந்தில் பாலாஜி | Senthil Balaji slams Thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (09/04/2019)

கடைசி தொடர்பு:06:30 (09/04/2019)

`பாயின்ட் டு பாயின்ட் பேருந்து போல தேர்தல் டு தேர்தல் மக்களை சந்திப்பவர்தான் தம்பிதுரை!' - செந்தில் பாலாஜி

``கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தம்பிதுரை எம்.பி-யாக இருக்கிறார். ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யலை. மக்களையும் சந்திக்கலை. தம்பிதுரை பாயின்ட் டு பாயின்ட் பேருந்துபோல, தேர்தல் டு தேர்தல் மட்டும் மக்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார்" என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக குற்றம்சாட்டினார்.

செந்தில் பாலாஜி பிரசாரம்

வரும் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் அதையொட்டி, தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரையே மறுபடியும் களமிறங்கி இருக்கிறார். தி.மு.க கூட்டணியில் கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்தக் கட்சியின் ஜோதிமணி வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜி பிரசாரம்..

இந்நிலையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மணவாசி, மாயனூர், மேட்டு திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம் கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், திராவிட முன்னேற்றக் கழக கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, மாநில நெசவாளர் அணிச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக மாயனூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக கைச் சின்னத்தில் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

தம்பிதுரை

அப்போது பேசிய அவர், ``மாயனூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் மேம்பாலம் கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதை நிறைவேற்ற பணமிருந்தும், தம்பிதுரைக்கு மனமில்லை. தி.மு.க மற்றும் காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கல்விக்கடன், விவசாயக் கடன் ரத்து, ஏழை எளிய குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6,000 வீதம் வருடத்துக்கு 72,000 வழங்கிட தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கிறோம். அவை அனைத்தும் ராகுல் காந்தி தலைமையிலான மத்திய அரசு அமைந்ததும், மக்களுக்கு நிறைவேற்றப்பட உள்ளது. இதேபோல, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் பத்தாண்டுகள் எம்.பியாக இருந்து வந்த அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை பாயின்ட் டு பாயின்ட் பேருந்து போல தேர்தல் டு தேர்தல் மட்டும் மக்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். எனவே, அவருக்கு சரியான பாடம் புகட்ட நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். தம்பிதுரைக்கு இதுவே கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும். எனவே, வரும் தேர்தலில் அனைவரும் கைச்சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்றார்.