`கனிமொழியும் ராசாவும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவா சிறை சென்றார்கள்?’- எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாடல் | MR Vijayabaskar slams kanimozhi and A raja

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (09/04/2019)

கடைசி தொடர்பு:07:07 (09/04/2019)

`கனிமொழியும் ராசாவும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவா சிறை சென்றார்கள்?’- எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாடல்

ஊழலைப் பற்றி பேச தி.மு.க-வுக்கு எந்த அருகதையும் கிடையாது. கனிமொழியும் ராசாவும் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தர சிறைக்குச் சென்றார்களா..." என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

 எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரசாரம்

கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமானூர், சணப்பிரட்டி, தொழில்பேட்டை, நரிப்பையூர், காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் ஆகியோர் தம்பிதுரையை ஆதரித்து இரட்டை இலைச் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.


 எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரசாரம்..

கரூர் காந்திகிராமம் பேருந்து நிலையத்தில் பேசிய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``இந்தியாவை மீண்டும் மோடி ஆளவேண்டும் என்ற ஒத்த கருத்து அடிப்படையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு, தேர்தல் நடைபெற உள்ளது. புரட்சித்தலைவி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், பெண்களுக்கென தனித் திட்டங்களை வகுத்துத் தந்தவர். குறிப்பாக, திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊக்கத்தொகை, வயதான முதியோருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டுவந்தார். ஊழலைப் பற்றி பேசுவதற்கு தி.மு.க-வுக்கு எந்த அருகதையும் கிடையாது. கனிமொழியும் ராசாவும் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தர சிறைக்குச் சென்றார்களா? ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மைனாரிட்டி தி.மு.க அரசு, தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக வைத்திருந்தது. அதன்பின் ஆட்சி அமைத்த ஜெயலலிதா தலைமையிலான அரசு, தற்போது 1500 மெகாவாட் மின் உற்பத்தியை உபரியாகக் கையிருப்பு வைத்துள்ளது. 

 எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரசாரம்...

இன்று, ஏழைக் குடும்பங்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல, கரூர் காந்திகிராமம் பகுதியில் 800 படுக்கைகள்கொண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 27 ஏக்கரில் விரைவில் திறக்கப்பட உள்ளது. கரூரின் மையப்பகுதியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய வேண்டும் என்பதற்காக, இப்பகுதியில் மருத்துவக் கல்லூரியை அமைத்துள்ளோம். இதுபோல, எண்ணற்ற திட்டங்களை இப்பகுதிக்கு கொண்டுவந்த தம்பிதுரை, மீண்டும் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடையச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.