"ஆதிச்சநல்லூரைவிடவும் பழைமையானது பழனி ரவிமங்கலம் அகழ்வாராய்ச்சி..!" - நாராயணமூர்த்தி | Ravimangalam is more ancient than Athichanallur - Narayanamurthy

வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (09/04/2019)

கடைசி தொடர்பு:12:10 (09/04/2019)

"ஆதிச்சநல்லூரைவிடவும் பழைமையானது பழனி ரவிமங்கலம் அகழ்வாராய்ச்சி..!" - நாராயணமூர்த்தி

திச்சநல்லூர் அகழ்வாய்வு பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் அதேவேலையில், பழனி அருகேயுள்ள ரவிமங்கலம், அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது.

மனித இனம் தோன்றிய நாள் முதலே மிகவும் தொன்மையான மற்றும் பழைமையான மொழி தமிழ் மொழி என்பது அண்மைக்காலமாக நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. உலகில் தோன்றிய முதல் இனம் தமிழ் இனம்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் தமிழகத்திலும் பிற இடங்களிலும் கிடைத்து வருகின்றன. அதை உறுதிப்படுத்துவதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன.

ரவிமங்கலம்

தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் தமிழ் மொழி, தமிழர்கள் குறித்த தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அந்த நிலையை உறுதிப்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் கீழடி அகழ்வாராய்ச்சியும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சான்றுகளும் திகழ்கின்றன. கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், பழனி பொருந்தல் ஆகியவற்றைவிடக் காலத்தில் தொன்மையானதாகவும், பரப்பளவில் அதிகமாகவும் உள்ள தொல்லியல் மேடு என்றால் அது `ரவிமங்கலப் பெருங்கற்காலச் சின்னங்கள்’ ஆகும்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்திருப்பது ரவிமங்கலம் கிராமம். சங்க காலத்தின் இறுதியில் அமைந்திருந்த சின்னங்கள் இங்கு புதைந்துள்ளன. கி.மு 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை அவை. சங்க காலத்தில் இறந்தவர்களைப் புதைக்க உருவாக்கப்பட்ட புதைகுழிகள், கல்வட்டங்கள், பதுக்கைகள் போன்றவை இந்தப் பகுதியில் காணப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 325 மீட்டர் உயரத்தில் உள்ள பகுதியில் இந்தச் சின்னங்கள் காணப்படுகின்றன.

ரவிமங்கலம்

பாண்டிய மன்னர்களின் தலைநகரான மதுரையிலிருந்து பாரசீகம், கிரேக்கம், ரோம் ஆகிய பேரரசுகளை இணைக்கும் சங்ககாலப் பெருவழிப் பாதையான கொழுமம் பெருவழிப்பாதையின் தெற்கு எல்லையில் இந்தச் சின்னங்கள் காணப்படுவது கூடுதல் சிறப்பாகும். இந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த ரவிமங்கலத்தில் புதைகுழிகள், முதுமக்கள் தாழிகள், எலும்புகள், கலயங்கள், பானைகள், ஓடுகள் போன்றவை சிதைந்தும் உடைந்த நிலையிலும் தென்படுகின்றன. தற்போது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்தச் சின்னங்கள் 100 ஏக்கரில் மிகவும் நெருக்கமாகவும், எஞ்சியுள்ள 100 ஏக்கர் பரப்பில் பரவலாகவும் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பாலாறு, பொருந்தலாறு அணையின் கிளை வாய்க்கால் இந்தச் சின்னங்களின் ஊடாகத் தோண்டப்பட்ட விதத்திலும் புதையல் வேட்டைக்காக இந்த நிலங்கள் தோண்டப்பட்ட விதத்திலும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்தச் சின்னங்கள் சிதைந்தும், மறைந்தும் போய்விட்டன. மீதமுள்ள 100 ஏக்கரில் 200-க்கும் குறைவான சின்னங்களே தப்பிப் பிழைத்துள்ளன. சில வருடங்களுக்கு முன் தொள்ளாயிரத்துக்கும் அதிகமான சின்னங்கள், தனித்தனியே எண்ணக்கூடிய வகையில் கிடைத்திருக்கின்றன. 

ரவிமங்கலம்

ரவிமங்கலம் புதைகுழிகள் உள்ள பகுதிகளில் சங்க காலத்தைச் சேர்ந்த மூன்று இரும்பு உருக்காலைகள் செயல்பட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இரும்புக்கான மூலப் பொருள்கள், அச்சு உலைகள், இரும்பை உருக்கத் தேவையான சுண்ணாம்புக் கட்டிகள் போன்றவை இன்றளவும் அந்த இடத்தில் காணப்படுகின்றன. பொதுவாகச் சங்க காலப் புதைகுழிகளான கல்வட்டங்கள் வட்ட வடிவங்களிலேயே காணப்படும். சங்க காலத்தின் இறுதி மற்றும் சங்கம் மருவிய காலப் பகுதியைச் சேர்ந்த சதுர வடிவலான இரண்டு புதைகுழிகள் இங்கு காணப்படுகின்றன.

ரவிமங்கலம் ஆய்வு பற்றி நாராயணமூர்த்திரவிமங்கலத்தில் அகழ்வாராய்ச்சி செய்துவரும் தொல்லியல் ஆய்வாளர் வெ.நாராயணமூர்த்தி, தொன்மைச் சின்னங்களுக்கு ஊறு நேர்ந்து விடாமல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகத் தன்னுடைய ஆராய்ச்சியின் முன்னேற்றங்கள் குறித்து வெளியிட்டும் வருகிறார். அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று, மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த அடிப்படை விழிப்புணர்வை இலவசமாக ஏற்படுத்தி வருகிறார்.

ரவிமங்கலம் ஆராய்ச்சி பற்றி நாராயணமூர்த்தி கூறுகையில், "நான் சிறுவயதிலிருந்தே ரவிமங்கலத்தின் சிறப்புகளைக் கவனித்து வருகிறேன். ரவிமங்கலத்துக்கு மேற்கில் அமைந்துள்ள இந்தச் சின்னங்கள் பற்றி என் தந்தையார் சிறு வயதில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு அரசு வனத்துறையில் வனச்சரக அலுவலராக இருந்தபோது இந்தச் சின்னங்கள் அமைந்துள்ள நத்தம் புறம்போக்கு நிலப்பகுதிகளை அரசின் ஆணைப்படி அவர் அளந்துள்ளார். பிற்பாடு அந்த இடம் ஏழை, எளிய மக்களுக்கு விவசாய நிலமாக அரசால் பட்டா செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிலத்தின் தொன்மையும் சிறப்பும் தெரியாததால் இந்தச் சின்னங்கள் சிதைக்கப்படுகின்றன. இதனால் முதுமக்கள் தாழி, கலயங்கள், பானை ஓடுகள் போன்றவை உடைந்த நிலையில் வெளிப்படுகின்றன" என்றார்.

இந்த அளவுக்கு சிறப்புவாய்ந்த ரவிமங்கலப் பெருங்கற்காலப் புதைகுழிகளைப் அகழாய்வு செய்வது, தமிழகத்தின் தொன்மைக்கும் வரலாற்றுக்கும் ஒரு பேரொளியைப் பாய்ச்சுவதாக இருக்கும். நமது முன்னோர்கள் மட்டும் அந்தப் புதைகுழிகளில் புதைக்கப்படவில்லை; மாறாக நம்முடைய தமிழ் மொழி, தமிழர்களின் வரலாறு ஆகியனவும் அதில் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து இந்த உலகுக்கு அறிவிக்க வேண்டியது நம்முடைய மாபெரும் வரலாற்றுக் கடமை. அதை நாம் செய்யத் தவறினால் வரலாற்றுப் பழி நம் மீது வந்து சேர்ந்துவிடும்" என்றார்.

ரவிமங்கலம் அகழ்வாய்வை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு அந்தப் பழியை துடைக்கப்போகிறதா, தொடர்ந்து சுமக்கப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..!


டிரெண்டிங் @ விகடன்