`தோல்வியை ஏற்றுக்கொண்டு, முதல்வர் பதவி விலக வேண்டும்!' - 8 வழிச் சாலை தீர்ப்பு குறித்து முத்தரசன் | "Edappadi should resign in 8 road cases!" - Mutharasan interview!

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (09/04/2019)

கடைசி தொடர்பு:12:15 (09/04/2019)

`தோல்வியை ஏற்றுக்கொண்டு, முதல்வர் பதவி விலக வேண்டும்!' - 8 வழிச் சாலை தீர்ப்பு குறித்து முத்தரசன்

``நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இருந்தால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கரூரில் கருத்து தெரிவித்துள்ளார். 

 முத்தரசன் பிரசாரம்

கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கரூர் வெங்கமேடு பகுதியில் வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார். இந்தத் தேர்தல் பிரசாரத்தில் ஏராளமான பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனின் தேர்தல் பரப்புரையைக் கேட்கத் திரண்டிருந்தனர்.

 முத்தரசன் பிரசாரம்..

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "மதுரை, சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், ஒரு அற்புதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 'தமிழக அரசு சட்டவிரோதமாகச் செயல்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்தியது ஏற்க முடியாது. எனவே, கைப்பற்றிய நிலங்களை திரும்ப விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்' எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. எடப்பாடி அரசுக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இருந்தால், தோல்வியை ஒப்புக்கொண்டு, உடனே பதவி விலக வேண்டும்.

 முத்தரசன் பிரசாரம்...

அறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலையை ஊடைத்து சேதப்படுத்தியவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அதனால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். கலவரத்தைத் தூண்டி, அதில் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சமூக விரோத கும்பலுக்கு அரசு துணைபோகக் கூடாது. திராவிடக் கழக ஆசிரியர் வீரமணியை திருச்சியில் வழிமறித்து தகராறில் ஈடுபட்டவர்கள், செருப்பு, சோடாபாட்டில் உள்ளிட்டவற்றை வீசியபோது, காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. 


 முத்தரசன் பேட்டி

அதேபோல, 'காந்தியைச் சுட்டதுபோல வீரமணியைச் சுடுவோம்' என ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதுசம்பந்தமாக, சென்னையில் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் தபால் ஓட்டு படிவங்களைக் கொடுக்காமல் தாமதப்படுத்திவரும் தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக துணைபோகக் கூடாது. பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கைகுறித்து கேட்கிறீர்கள். 2014 -ம் வருட தேர்தல் அறிக்கையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம், கறுப்புப் பணத்தை மீட்போம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியதுபோல், மறுபடியும் பாரதிய ஜனதா கட்சி தற்போது மக்களை ஏமாற்றும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இந்தி மொழிக்கு முக்கியத்துவம் வழங்குவோம், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவோம் எனக் கூறுவது  அபாயகரமானது; ஆபத்தானது; தேசத்தின் ஒற்றுமைக்கு எதிரானது. எனவே, மக்கள் பாரதிய ஜனதா கட்சியை இந்த முறை நிராகரிப்பார்கள்" என்றார் அதிரடியாக.