``ஐந்தாண்டுகளில் எனது சொத்துப் பட்டியலில் ஒரு பைசாகூட அதிகரிக்காது!" - உறுதியளித்த ஜோதிமணி | "will not increase in my property" - Jyothimani is promising in the campaign!

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (09/04/2019)

கடைசி தொடர்பு:12:45 (09/04/2019)

``ஐந்தாண்டுகளில் எனது சொத்துப் பட்டியலில் ஒரு பைசாகூட அதிகரிக்காது!" - உறுதியளித்த ஜோதிமணி

``தம்பிதுரை போல பண பலத்தை நம்பி நான் தேர்தலில் நிற்கவில்லை. மக்களை நம்பித்தான் தேர்தலில் நிற்கிறேன்" என்று தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பேசினார்.

 ஜோதிமணி பிரசாரம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாந்தோணி ஒன்றியம், செல்லாண்டிபாளையம், கோவிந்தம்பாளையம், பெரியார் நகர், அப்பிபாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.


 ஜோதிமணி பிரசாரம்..

அவருடன், கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, தி.மு.க மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், தாந்தோணி ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். கரூர் பெரியார் நகரில் தேர்தல் பரப்புரையின்போது, திறந்தவெளி வாகனத்தில் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு, வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


 ஜோதிமணி பிரசாரம்...

அப்போது அவர், "எளிமையான விவசாய குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன். எனக்கு வாக்களித்து, நீங்கள் என்னை வெற்றிபெறவைத்தால், நேர்மையாகவும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்களுக்காகப் பணியாற்றுவேன். உங்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். எனவே, நான் உங்களுக்கு ஒரு உறுதிமொழி அளிக்கிறேன். அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை போல கடந்த 10 ஆண்டுகளில், 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சம்பாதித்துக்கொள்ள மாட்டேன். என்னுடைய தேர்தல் அறிக்கையில், என்னுடைய பாரம்பர்ய விவசாய சொத்துக்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இதேபோல, அடுத்த ஐந்தாண்டுகளில், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, மீண்டும் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கினால், என்னுடைய சொத்து மதிப்பில் முறைகேடாக ஒரு நயா பைசாகூட அதிகமாக இருக்காது. அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரையைப்போல, பண பலத்தை நம்பி இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. மக்களாகிய உங்கள் பலத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறேன். ஆகவே, எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து, மாபெரும் வெற்றியைத் தேடித் தாருங்கள்" என்றார்.