``யாரை ஏமாற்ற வேஷம் போடுகிறீர்கள்?" – தூத்துக்குடியில் தி.மு.க-வை விளாசிய தினகரன் | We will not be alliance with the BJP. Can Stalin say this, asks ttv dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (09/04/2019)

கடைசி தொடர்பு:13:00 (09/04/2019)

``யாரை ஏமாற்ற வேஷம் போடுகிறீர்கள்?" – தூத்துக்குடியில் தி.மு.க-வை விளாசிய தினகரன்

``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர எதிரி தி.மு.க, பா.ஜ.க-வுடன் நாங்கள் எங்களின் வாழ்நாள் முழுவதும் கூட்டணி வைக்க மாட்டோம். இதேபோல, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா?” என அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பினார்.

தினகரன்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து, அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “மக்கள் விரும்பாத எடப்பாடி பழனிசாமி அரசையும், தமிழகத்தை வஞ்சிக்கின்ற மோடி அரசையும் முடிவுக்குக் கொண்டுவர இந்தத் தேர்தல் ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. அதேபோல, இன்னொரு புறம் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியினர்.  தி.மு.க, மதச்சார்பற்ற கூட்டணி என்று அவர்களின் கூட்டணிக்குப் பெயர் வைத்துள்ளார். உண்மையில் அது, 2 ஜி ஊழல் கூட்டணி. மதங்களைப் பற்றி தேவையில்லாமல் பேசி குழப்பத்தை ஏற்படுத்துவதில் பா.ஜ.க-விற்கு  இணையாக தி.மு.க-வும் இறங்கிவிட்டது.

பிரசாரம்

 கடந்த காலங்களில், சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் எனச் சொல்லிக்கொண்டிருந்த தி.மு.க, இன்றைக்கு தேவையில்லாமல் மதங்களை இழுத்து அரசியல் செய்த காரணத்தினால், பெரும்பானமையான இந்துக்களின் எதிரிகளாகிவிட்டது. தற்போது தேர்தல் நெருங்கிவிட்டதால், எங்கள் வீட்டில் உள்ள  பெண்களும் கோயில்களுக்குச் செல்வார்கள். நாங்கள் இந்துக்களுக்கு எதிரிகள் அல்ல என ஒப்புதல் வாக்குமூலம்  கொடுத்து சமாளிக்கிறார். அதேபோல, இங்கு போட்டியிடும் தி.மு.க வேட்பாளரான கனிமொழியும் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தவறாகப் பேசினார். ஆனால் அவரது தாயார், திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலுக்கு மகளின் வெற்றிக்காக சென்று சுவாமி கும்பிடுகிறார். யாரை ஏமாற்ற இந்த வேஷம் போடுகிறார்கள்.

பிரசார கூட்டம்

முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்துக் கடவுள்களைத் திட்டினால்தான் இவர்களுக்கு வாக்களிக்கப் போகிறார்களா? உண்மையான இந்துக்கள், கிறிஸ்வதவர்கள், இஸ்லாமியர்கள், இன்னொரு மதத்தைத் துன்புறுத்துவதை அவதூறாகப் பேசுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ராகுல் காந்தி அறிவு முதிர்ச்சி இல்லாதவர் எனப் பேசிவிட்டு இப்போது, ராகுல்தான் பிரதமர் என ஸ்டாலின் பேசிவருகிறார் ஸ்டாலின்.   அதேபோல, ஸ்டாலினையும் யாரும் முதல்வராக  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து அமைதியான முறையில் போராடிய மக்களை ஏதோ தீவிரவாதிகளைப் போல, மத்திய மாநில அரசுகள் சுட்டுக் கொன்றன.

தினகரன்

வேதாந்தா குழுமத்தின் எடுபிடிகள்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். இங்கே, தமிழகத்தில் இருப்பது மோடியின் எடுபிடி எடப்பாடி கம்பெனி. பா.ஜ.க-வுடன் மறைமுக கூட்டணியில் உள்ளவர்கள்தான் தி.மு.க, பா.ஜ.க-வின் ஏ-டீம், அ.தி.மு.க என்றால்,  பி - டீம்தான் தி.மு.க. இந்த இரு கட்சிகளுமே அரசியல் வியாபாரிகள்தான். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர எதிரிதான் தி.மு.க.  பா.ஜ.க-வுடன் நாங்கள் எங்களின் வாழ்நாள் முழுவதும் கூட்டணி வைக்க மாட்டோம். ஆனால், ஸ்டாலினால் இதைச் சொல்ல முடியுமா? ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயம் வழங்கிட, அந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க