10 நாள்கள் தாலியை மறைத்த 16 வயதுச் சிறுமி - காவல் நிலையத்தில் அன்புப் போராட்டம் | Chennai teenage girl got married to auto driver secretly

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (09/04/2019)

கடைசி தொடர்பு:13:37 (09/04/2019)

10 நாள்கள் தாலியை மறைத்த 16 வயதுச் சிறுமி - காவல் நிலையத்தில் அன்புப் போராட்டம்

சென்னையில் 16 வயது சிறுமியை பெரியபாளையம் கோயிலுக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் அவருக்கு தாலி கட்டினார். 10 நாள்களாகப் பெற்றோருக்குத் தெரியாமல் தாலியை மறைத்துள்ளார் சிறுமி. தாலி கட்டிய விவகாரம் காவல் நிலையத்துக்கு வந்தபோது அங்கு நடந்த அன்புப் போராட்டம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

 வடசென்னையைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியின் அம்மா வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், `என்னுடைய  மகளை ஆசைவார்த்தைக் கூறி வியாசர்பாடியைச் சேர்ந்த கோபி (28) தாலிகட்டியுள்ளார். கோபிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. எனவே, என் மகளுக்கு நீதி கிடைக்க கோபி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர். புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். அந்தச் சிறுமியையும் கோபியையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 `கடந்த 20.3.2019-ல் பெரியபாளையத்துக்குத் தன்னை கோபி அழைத்துச் சென்றதாகவும் அங்குள்ள கோயிலில் தனக்குத் தாலி கட்டியதாகவும் கூறினார். அதன் பிறகு அங்கிருந்து கோபியின் வீட்டுக்கு வந்தோம்' என்று சிறுமி போலீஸாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கோபி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 சிறுமிக்கு தாலி கட்டிய ஆட்டோ டிரைவர்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, ப்ளஸ் ஒன் பெயிலாகிவிட்டார். இதனால் தையல் பயிற்சி வகுப்புக்குச் சென்றுவருகிறார். சிறுமியின் அப்பா, வாட்டர் கேன் பிசினஸ் செய்துவருகிறார். இதனால் வாட்டர் கேனை ஆட்டோவில் எடுத்துச் செல்ல சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார் ஆட்டோ டிரைவர் கோபி. இருவரும் நட்பாகப் பழகியுள்ளனர். இந்தநிலையில்தான் சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய கோபி, அவரைப் பெரியபாளையம் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு தாலியும் கட்டியுள்ளார். அதன் பிறகு கணவன், மனைவியாக இருவரும் வாழ்ந்துள்ளனர். 

வீட்டுக்கு வந்த சிறுமி, தாலியைப் பெற்றோருக்குத் தெரியாமல் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மறைத்து வந்துள்ளார். திடீரென ஒருநாள் சிறுமியின் அம்மா தாலியைப் பார்த்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், தாலி குறித்து சிறுமியிடம் கேட்டபோதுதான் கோபி விவகாரம் வீட்டுக்குத் தெரியவந்துள்ளது. கோபி மீது சிறுமியின் அம்மா கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். சிறுமிக்கு, போதிய கவுன்சலிங் அளித்துள்ளோம்" என்றனர். 

 சிறுமி தரப்பில் பேசியவர்கள் ``ஆட்டோ டிரைவரான கோபி, அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வருவார். அப்போது சிறுமியிடம் கோபி பேசுவார். கோபி உறவினர் என்பதால் அதை யாரும் தவறாகக் கருதவில்லை. ஆனால். சிறுமியிடம் கோபி வேறு எண்ணத்தில் பழகியது இப்போதுதான் தெரிகிறது. சிறுமியின் மனதை மாற்றிய கோபி, வீட்டுக்குத் தெரியாமல் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். அதையும் சிறுமி வீட்டுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டார். கோபிக்குத் திருமணமாகிவிட்டது. சிறுமியின் எதிர்கால வாழ்க்கையை அவர் கேள்விகுறியாக்கிவிட்டார். கோபி, இப்படி செய்வார் என்று கனவில்கூட நாங்கள் நினைக்கவில்லை" என்றனர் கண்ணீருடன் 

 தாலி

பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துக்கொண்டு அவரின் அம்மாவும் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். போலீஸாரிடம் என் மகளின் வாழ்க்கையை கோபி நாசமாக்கிவிட்டான். அவன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று  புகார் கொடுத்தார். அப்போது பெண் போலீஸார் சிறுமியின் பெற்றோரிடம் `உங்கள் மகளை ஒழுங்காக வளர்க்காமல் இப்போது வந்து புகார் கொடுக்கிறீர்கள்' என்ற ரீதியில் பேசியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் அவமானத்தில் கூனிக் குறுகி காவல் நிலையத்தில் நின்றுள்ளது. ஒருகட்டத்தில் சிறுமியிடம் தனியாக விசாரித்தபோது கோபியை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அவருடன் வாழவிரும்புவதாக சிறுமி அப்பாவியாகக் கூறியுள்ளார். அதைக் கேட்ட போலீஸார் சிறுமியிடம், வயதைச் சுட்டிக்காட்டியதோடு சட்ட சிக்கல்களை எடுத்துக்கூறியுள்ளனர். கோபியின் இந்த நடவடிக்கையால் அவரின் மனைவியும் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். ஆனால், வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் 16 வயதுச் சிறுமிக்குத் தாலி கட்டிய திருமணமான 28 வயது ஆட்டோ டிரைவர் வழக்கில் காதலுக்கு வயசு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. காவல் நிலையத்தில் கோபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதலில் அன்புப் போராட்டம் நடந்துள்ளது. போலீஸாரும் பெற்றோரும் 16 வயதுச் சிறுமிக்கு புத்திமதி கூறிய பிறகுதான் கோபி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.