`இனி ஹெல்மெட் போட்டு வரணும்... சரியா' - கறார் கனிமொழி! | dmk candidate kanimozhi advised students for wearing helmet

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (09/04/2019)

கடைசி தொடர்பு:13:45 (09/04/2019)

`இனி ஹெல்மெட் போட்டு வரணும்... சரியா' - கறார் கனிமொழி!

பிரசாரத்துக்கு வந்த இளைஞர்களுக்கு தி.மு.க எம்.பி கனிமொழி அறிவுரை கூறியுள்ளார்.

கனிமொழி

தி.மு.க எம்.பி கனிமொழி, முதல் முறையாகத் தேர்தலில் களம் இறங்கியுள்ளார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவர், தொகுதியில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 அப்பாவிகளின் உயிர் பறிபோயிருக்கிறது. அவர்களின் உயிர்த் தியாகத்துக்கு நியாயம் கிடைக்கச்செய்வோம்' எனக் கூறி, அவர் செய்து வரும் பிரசாரத்துக்கு வாக்காளர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். இதுதவிர, ` சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்' என்ற வாக்குறுதிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.

கனிமொழி

 இவரது பிரசாரத்தின்போது, ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. நேற்று, தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் பிரசாரம்செய்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு ஆதரவாக சில இளைஞர்கள் டூ வீலர்களில் கொடி பிடித்துக்கொண்டு உடன் சென்றனர். அவர்கள் யாருமே ஹெல்மெட் அணிந்து செல்லவில்லை. இதனைப் பார்த்த கனிமொழி, தனது பிரசார வாகனத்தைப் பாதிலேயே நிறுத்தி, அந்த இளைஞர்களிடம் சென்ற அவர், ``எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கிட்டு வண்டி ஓட்ட மாட்டீங்களா... அடுத்த தடவை ஹெல்மெட் இல்லாம பார்த்தேன் அவ்வளவுதான். நாளையில் இருந்து ஹெல்மெட் போட்டுதான் வரணும்... சரியா" என செல்லமாக சிரித்துக்கொண்டே  கடிந்துகொண்டார். இதற்கு அந்த இளைஞர்கள் சரி எனச் சொல்ல, அங்கிருந்து புறப்பட்டார் கனிமொழி. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க