கூட்டணி வேறு; கொள்கை வேறு - 8 வழிச் சாலை வழக்கில் பா.ம.க சார்பில் கேவியட் மனு! | PMK Anbumani files a petition in salem- chennai 8 lane highways case

வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (09/04/2019)

கடைசி தொடர்பு:14:24 (09/04/2019)

கூட்டணி வேறு; கொள்கை வேறு - 8 வழிச் சாலை வழக்கில் பா.ம.க சார்பில் கேவியட் மனு!

சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்துக்காக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக,  தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை  நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று ரத்துசெய்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், சேலம் 8 வழிச் சாலை வழக்கில் பா.ம.க சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேவியட் மனு

மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த தீர்ப்பை அடுத்து, தேர்தலை ஒட்டி கூட்டணி அமைத்திருக்கும் அ.தி.மு.க,பா.ம.க ஆகிய கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. தற்போது, கூட்டணியில் இருக்கும் இந்த இரு கட்சிகளும், எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்திற்கு இரு வேறு அணியில் இருந்ததே அதற்குக் காரணம். அ.தி.மு.க அரசு செயல்படுத்த நினைத்த இந்த மத்திய அரசு திட்டத்திற்கு, பா.ம.க கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், இப்போது கூட்டணியில் இருக்கும் இந்த மூன்று கட்சிகளின் நிலைப்பாடுகுறித்து கேள்வி எழுந்தது.

சேலம்

இந்நிலையில், கூட்டணி வேறு கொள்கை வேறு. 'எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்' என்று பா.ம.க தரப்பில் நேற்று சொல்லப்பட்டது. பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ், "தீர்ப்பு 5 மாவட்ட விவசாயிகள் நலனைக் காப்பதற்காக பா.ம.க சார்பில் நான் மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று நாங்கள், கூட்டணி அ.தி.மு.க அரசிடம் வலியுறுத்துவோம்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதேசமயம், அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "எட்டு வழி பசுமைச் சாலை வழக்கில் நாங்கள் மேல்முறையீடு செய்வோம்" என்று பேசியிருந்தார்.

ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில், சேலம் 8 வழிச் சாலை வழக்கில் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று மனுதாரர் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.  பா.ம.க தரப்பு வழக்கறிஞர் பாலு, கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 

அன்புமணி

'தேர்தல் சமயம், கூட்டணிக்குள் இது குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்' என்று அ.தி.மு.க, பா.ம.க இருதரப்பிலும் மிகவும் கவனத்துடன் இந்தத் தீர்ப்பு கையாளப்படுவதாகக் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.