தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! | chithirai festival in thoothukudi Sankara rameswarar temple Starts

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (09/04/2019)

கடைசி தொடர்பு:15:15 (09/04/2019)

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.

சித்திரைத் திருவிழா

தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு காலையில் கொடிப்பட்டம் வீதியுலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், கொடிமரம், சுவாமி அம்பாளுக்கு அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

கொடியேற்றம்

இன்று தொடங்கிய இத்திருவிழா, வரும் 18-ம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. தினமும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. தினமும் மாலையில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது. 3-ம் திருநாளான 11-ம் தேதி காலை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா நடைபெறுகிறது.

7-ம் நாள் திருவிழாவான  15-ம் தேதி காலை  நடராஜப் பெருமானுக்கு உருகு சட்டசேவை நடைபெறுகிறது. 10-ம் நாள் திருவிழாவான வரும் 18-ம் தேதி, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. சுவாமி சங்கர ராமேஸ்வரர் மற்றும் அம்பாள் பாகம்பிரியாள் பெரியதேரிலும், சிறிய தேரில் விநாயகரும், முருகனும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க