``தமிழகத்துக்கு பல திட்டங்களை வாதாடி, போராடித் தந்தவர் தம்பிதுரை!" - ஜி.கே.வாசன் புகழாரம்! | GK Vasan about admk candidate thambithurai

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (09/04/2019)

கடைசி தொடர்பு:15:55 (09/04/2019)

``தமிழகத்துக்கு பல திட்டங்களை வாதாடி, போராடித் தந்தவர் தம்பிதுரை!" - ஜி.கே.வாசன் புகழாரம்!

``கருத்துக்கணிப்புகள் என்பது வெறும் கருத்து திணிப்புதான். மக்களின் மனநிலையை கருத்துக் கணிப்பு மூலம் மாற்ற முடியாது. மக்களின் வாக்குச் சீட்டு முடிவுகளே இறுதியானது" என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கரூரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் பேட்டி

அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் வழியில், கரூரில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.


 கூட்டம்


பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், ``அ.தி.மு.க, பி.ஜே.பி கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெறும். கருத்துக்கணிப்பு என்ற பெயரில் வெறும் கருத்துத் திணிப்புதான் நடக்கிறது. மக்களின் வாக்குச் சீட்டு கருத்தே இறுதியானது. தமிழக வாக்காளர்கள் ஏமாளிகள் அல்ல. மக்களுடைய மனநிலையை தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மாற்ற முடியாது. தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது, காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தைக் காட்டுகிறது. முரண்பாட்டின் மொத்த வடிவமாக காங்கிரஸ் கட்சி கேரளாவில் போட்டியிடுகிறது. அதற்கு மாற்றுக் கருத்தில்லை. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

 
 நிர்வாகிகள் சந்திப்பு

வரும் 16 -ம் தேதி வரை தமிழகம் முழுக்க தொடர் பிரசாரத்தில் இறங்க உள்ளேன். கரூர் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தமட்டில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை உள்ளடக்கிய ஒரு பிரபலமான தொகுதியாகும். இங்கு அ.தி.மு.க வேட்பாளராக உள்ள தம்பிதுரை, கடந்தமுறை நாடாளுமன்றத் துணை சபாநாயகராக இருந்தார். அ.தி.மு.க-விலும் முக்கியத் தலைவராக உள்ளார். இவர் தமிழக நலனுக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். தமிழர்களுக்கு வேண்டிய விஷயங்களை டெல்லியிலிருந்து, போராடி, வாதாடி வாங்கி வந்தவர். வல்லமைமிக்கவர். நல்ல போராளி. அதனால், அவரை மக்கள் ஜெயிக்க வைத்தால், தமிழகத்துக்குத் தேவையான பல திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தருவார். அவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தொகுதி முழுக்க அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அவர் எம்.பியானால், பல நன்மைகள் கிடைக்கும்" என்றார்.