`வகுப்பறையில் ரத்தத்துளிகள்; தூக்கில் தொங்கிய ஆசிரியர்' - கண்ணீர்விட்ட மாணவிகள்  | teacher dead body found in classroom in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (09/04/2019)

கடைசி தொடர்பு:19:22 (10/04/2019)

`வகுப்பறையில் ரத்தத்துளிகள்; தூக்கில் தொங்கிய ஆசிரியர்' - கண்ணீர்விட்ட மாணவிகள் 

  ஆசிரியர் தற்கொலை செய்த பள்ளி

சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியின் வகுப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கல்வி கற்பித்த ஆசிரியரின் மறைவைத் தாங்க முடியாமல் மாணவ மாணவிகள் கதறி அழுதனர். 

சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இந்தப்பள்ளிக்கு வழக்கம் போல மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இன்று காலை வந்தனர். வகுப்பறைக்குள் நுழைந்த மாணவ, மாணவிகள் ஆசிரியர் அந்தோணி ஜெனிபர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக அவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். வகுப்பறையைச் சுற்றி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கவலையோடு நின்றிருந்தனர். நீலாங்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர். தூக்கில் தொங்கிய அந்தோணி ஜெனிபரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 ஆசிரியர் தற்கொலை செய்த பள்ளி

ஆசிரியர் தூக்கில் தொங்கிய வகுப்பறையின் தரையில் ரத்தத் துளிகள் சிதறிக்கிடந்தன. அந்தோணி ஜெனிபரின் சடலத்தில் காயங்கள் இருக்கிறதா என போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனால் காயங்கள் எதுவும் இல்லை. இதனால் பிரேதப் பரிசோதனை முடிவில்தான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அந்தோணி ஜெனிபர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், பள்ளியிலேயே தங்கி ஆசிரியராக பணியாற்றிவந்தார். இவர், 8-ம் வகுப்பு, 9- ம் வகுப்புக்கு பாடம் நடத்திவந்துள்ளார். திருமணமாகவில்லை. அவர் இறந்த தகவல் கன்னியாகுமரியில் உள்ள பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். வகுப்பறையில் உள்ள மின்விசிறியில்தான் அவர் தூக்கில் தொங்கியுள்ளார். உடலில் காயங்கள் இல்லாத சமயத்தில் எப்படி ரத்தத் துளிகள் அங்கு சிதறிக்கிடக்கின்றன என்று விசாரித்துவருகிறோம்" என்றனர். வகுப்பறையில் எப்படி ரத்தம் வந்தது என்று போலீஸாரிடம் கேட்டதற்கு ``தூக்கில் தொங்கும்போது ரத்தம் வர வாய்ப்புள்ளது" என்று பதிலளித்தனர். 

ஆசிரியர் தற்கொலை செய்த பள்ளி

பள்ளி நிர்வாகத்தில் விசாரித்தோம். ``அறிவியல் பாடத்தை அந்தோணி கற்பித்துவந்தார். அவர் தூக்கில் தொங்கிய இடம் 8-ம் வகுப்பறை. அங்குதான் அவர் தங்கியும் இருந்தார். எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. வகுப்பறை முழுவதும் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனால், அதில் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. அவரின் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் அவருக்கு வந்த போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். நல்ல ஆசிரியர் அந்தோணி ஜெனிபரை இழந்துள்ளோம். அவரின் மறைவு எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது" என்றனர்.

சக ஆசிரியர்களிடம் கேட்டதற்கு, ``அவர் எங்களிடம் சகஜமாக பழகுவார். பள்ளியில் தேர்வு நடப்பதால் தேர்வை கண்காணிக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். பள்ளியில் மேற்பார்வையாளராகவும் இருந்தார். அவர் மரணத்துக்கு என்ன காரணம் தெரியவில்லை" என்றனர்.  

தற்கொலை செய்த ஆசிரியர்

அந்தோணி ஜெனிபர், தன் பெயரோடு தாயின் பெயரான ஜெனிபரையும் சேர்த்து வைத்துள்ளார். அம்மாவின் மீது அந்தளவுக்கு அன்பு வைத்திருந்தார். மாணவர்களிடம் அன்பாகப் பழகக்கூடியவர். பள்ளி நிர்வாகத்திலும் சக ஆசிரியர்களுடனும் அவருக்கு எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை. அப்படியிருக்கும்போது அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை என்று போலீஸ் விசாரணையின்போது தெரியவந்தது. இருப்பினும் ஆசிரியர் மரணத்துக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். 

 வகுப்பறையில் தங்களுக்குப் பாடங்களை கற்றுக் கொடுத்த ஆசிரியர் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவ, மாணவிகள் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். இதனால் உடனடியாக மாணவ, மாணவிகள் பள்ளியை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர். மாணவர்களுக்கு தேர்வு நடந்துவரும் நேரத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததால் பள்ளி நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. தொடர்ந்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் வேறு பள்ளியில் இன்று தேர்வு எழுதினர். 

ஆசிரியர் ஒருவர் வகுப்பறையிலேயே தற்கொலை செய்த தகவல் நீலாங்கரை பகுதியில் காட்டுத்தீ போல பரவியது.