`கண்ணீர் விட வைத்தார்கள்; அவர்களுக்கு எங்கள் ஓட்டு கிடையாது' - அ.தி.மு.க-வை அதிர வைத்த விஜய் ரசிகை! | vijay fans opposes admk for sarkar issue

வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (09/04/2019)

கடைசி தொடர்பு:19:21 (10/04/2019)

`கண்ணீர் விட வைத்தார்கள்; அவர்களுக்கு எங்கள் ஓட்டு கிடையாது' - அ.தி.மு.க-வை அதிர வைத்த விஜய் ரசிகை!

`சர்கார்' பட விவகாரத்தை வைத்து அ.தி.மு.க-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விஜய் ரசிகை ஒருவர் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

விஜய் ரசிகை

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமாகப் பிரசாரம் மேற்கொள்வதோடு வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களின் மனதைக் கவர்ந்து வருகின்றனர். சில இடங்களில் வேட்பாளர்களுக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிடைத்து வருகிறது. கோடை வெயிலின் சூட்டையும் தாண்டி தமிழகத்தில் பிரசாரம் நடத்து வரும் நிலையில், `அ.தி.மு.க-வினர் ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என விஜய் ரசிகை ஒருவர் போஸ்டர் பிடித்து நிற்கும் புகைப்படம் நமது கண்ணில் பட அவர் யாரென்று விசாரித்து அவரிடம் பேசினோம். ``நான் ஜெகதீஸ்வரி. விருதுநகர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவி. `சர்கார்' பட ரிலீஸின்போது அதை எதிர்த்து அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினார்கள். நாங்கள் வைத்திருந்த ஃப்ளெக்ஸ், பேனர்களைக் கிழித்தார்கள். 

விஜய் ரசிகை ஜெகதீஸ்வரி

அவர்கள் இப்படி நடந்துகொண்டதற்கு ஏதாவது பயனுள்ள காரணம் இருக்கிறதா. கிடையாது. திரைப்படத்தில் ஒரு கருத்து சொல்லப்பட்டால் அதைச் சினிமாவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் அப்படி அதை எடுத்துக்கொள்ளவில்லை. சாதாரண ரசிகன் முதல் மன்ற நிர்வாகி வரை அனைவரும் தங்களது சொந்தக் காசை போட்டு பேனர், ஃப்ளெக்ஸ் வைத்தார்கள். எங்களுடைய சந்தோஷத்துக்காக அதைச் செய்தோம். விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் அப்படிதான் செய்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் சினிமாவில் சொன்ன கருத்துக்காக அ.தி.மு.க-வினர் பிரச்னை செய்து நாங்கள் வைத்த ஃப்ளெக்ஸ், பேனர்களைக் கிழித்தார்கள். சாதாரண பிரச்னைக்காக எங்களைக் கண்ணீர்விட வைத்தார்கள். அந்தச் சம்பவம் ஒவ்வொரு விஜய் ரசிகரின் மனதிலும் மறையாமல் இருக்கிறது. இந்தக் காரணத்துக்காகதான் எங்களிடம் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என நோட்டீஸ் அடித்து வீட்டின் வாசலில் ஒட்டினேன். வலைதளங்களில் பதிவிட்டேன். வலைதளங்களிலும் எங்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவுக்கு எதிர்ப்பு

விஜய் அண்ணனோ, ரசிகர் மன்ற நிர்வாகிகளோ யாரும் எங்களை இப்படிச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை. நான் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது எனக்கான உரிமை. எங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஓட்டுப்போடுவோம். ஆனால், அ.தி.மு.க-வினருக்கு ஓட்டுப் போட மாட்டோம். அ.தி.மு.க-வின் போராட்டத்துக்குப் பிறகு இயற்கையாகவே விஜய் ரசிகர்கள் மனதில் அ.தி.மு.க மீதான வெறுப்பு வந்துவிட்டது. இது தேர்தல் சமயம் என்பதால் எங்கள் எதிர்ப்பைக் காண்பிக்கிறோம். ஒட்டுமொத்த தமிழகத்திலும் அ.தி.மு.க மீது விஜய் மக்கள் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். அதை இந்தத் தேர்தலில் காண்பிப்பார்கள். என் உறவினர் கூட அ.தி.மு.க-வில்தான் இருக்கிறார். இருந்தும் இதுவரை எங்கள் வீட்டுக்கு யாரும் ஓட்டு கேட்டு வரவில்லை" எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க