`மூட்டை மூட்டையாகச் சிக்கிய பணம்!’ - துரைமுருகன் மகன் மீது தேர்தல் அலுவலர் போலீஸில் புகார் | Rs.10.57 crore cash in Vellore! - Duraimurugan's son complains to police

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (09/04/2019)

கடைசி தொடர்பு:16:40 (09/04/2019)

`மூட்டை மூட்டையாகச் சிக்கிய பணம்!’ - துரைமுருகன் மகன் மீது தேர்தல் அலுவலர் போலீஸில் புகார்

வேலூரில், துரைமுருகன் உதவியாளரிடம் மூட்டை மூட்டையாக ரூ.10.57 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், துரைமுருகன் மகன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்காக மாஜிஸ்திரேட்டுக்கு அந்தப் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் களமிறங்கியிருக்கிறார். கடந்த மாதம் 29-ம் தேதி இரவு முதல் 30-ம் தேதி இரவு வரை வருமானவரித் துறை அதிகாரிகள் துரைமுருகன் வீடு மற்றும் பள்ளி, கல்லூரியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை நடத்தினர்.

காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகன் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணம் சிக்கின. வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டன. துரைமுருகனுக்கு நெருக்கமான மேலும் சிலரது வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில், துரைமுருகன் உதவியாளரிடம் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.10 கோடியே 57 லட்சம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, தி.மு.க வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் மற்றும் துரைமுருகன் உதவியாளர் சீனிவாசன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்ட கலெக்டரும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமன் உத்தரவின் பேரில் உதவி அலுவலர் சிலுபன், காட்பாடி போலீஸ் நிலையத்தில் இன்று மதியம் புகார் அளித்தார். புகாரில், ``கதிர்ஆனந்த் தாக்கல்செய்த வேட்புமனுவில் கையிருப்பாக ஏழரை லட்சம் ரூபாய்தான் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரின் வீட்டில் கையிருப்பைவிட அதிகமான தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேபோல், வேட்பாளருக்கு நெருக்கமானவரின் இடத்திலிருந்து ரூ.10.57 கோடி பணம் சிக்கியிருக்கிறது. எனவே, இருவரின் பெயரிலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டு வருமானவரித் துறை அறிக்கையையும் புகார் மனுவுடன் இணைத்துள்ளனர். நேரடியாகப் பிடிக்கப்படாத குற்றம் என்பதால் வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டு  காட்பாடி மாஜிஸ்திரேட்டுக்கு அந்தப் புகார் மனுவை இன்ஸ்பெக்டர் புகழ் அனுப்பியிருக்கிறார். மாஜிஸ்திரேட் அனுமதி கிடைத்தவுடன், துரைமுருகன் மகன் மற்றும் உதவியாளர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

துரைமுருகன் மகன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? அல்லது வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்துசெய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளதால் தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.