`நதிகளை இணைப்போம்னு பா.ஜ.க சொன்னதை வரவேற்கிறேன்!' - ரஜினி | rajini appreciate bjp manifesto

வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (09/04/2019)

கடைசி தொடர்பு:15:53 (09/04/2019)

`நதிகளை இணைப்போம்னு பா.ஜ.க சொன்னதை வரவேற்கிறேன்!' - ரஜினி

`பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் எனக் கூறியது வரவேற்கத்தக்கது. ஆண்டவருடைய ஆசீர்வாதத்தினால் முதலில் நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும்' என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி

``சட்டமன்றத் தேர்தல்தான் எங்களுக்கு இலக்கு'' என்று கூறி நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து விலகியே இருக்கிறார் ரஜினி. `ரஜினி எனக்கு ஆதரவு தருவார் என நம்புகிறேன்' என்று ஏற்கெனவே கமல் பேசியிருந்தார். ஆனால் ரஜினியோ, மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், எந்தக்கட்சி நதிகளை இணைக்கிறதோ, அவர்களுக்குத்தான் ஆதரவு என்று பா.ஜ.க-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ரஜினி எடுக்கிறார் என்று பரவலாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 கமல்

அப்போது பேசிய அவர், ``தர்பார் டைட்டில் எல்லோருக்கும் பிடித்துள்ளது, பாராட்டியுள்ளனர். எனது அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு மேல் அதைப்பற்றி எதையும் பேச விரும்பவில்லை. தயவுசெய்து ஊடகங்கள் இதை பெரிதாக்கி, எனக்கும் கமலுக்கும் இடையேயுள்ள நட்பை கெடுக்க வேண்டாம்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. நதிகளை இணைக்க வேண்டும் என ரொம்ப நாளாகக் கூறி வருகிறேன். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரை சந்தித்துள்ளேன். பகிரதம் யோஜனா பெயர் வைக்க வேண்டும் என கேட்டதற்கு சிரித்தார். தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைக்க வேண்டும் எனக் கூறியது வரவேற்கத்தக்கது. நதிகளை இணைப்பது பெரிய திட்டம். சொன்ன நதிகளை இணைப்பதற்கு ஆணையம் உருவாக்க வேண்டும் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தினால் முதலில் நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும். இணைத்தாலே பாதி வறுமை போய்விடும், பல கோடி பேருக்கு வேலை கிடைக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகும்'' என்று கூறினார்.