`4 வருடத்துக்கு முன் கொடுக்கப்பட்ட பொய்யான புகாருக்கு இப்போது எப்.ஐ.ஆர்!' - கொதிக்கும் கதிர்காமு | AMMK Kathirkamu explains about case against him

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (09/04/2019)

கடைசி தொடர்பு:19:20 (09/04/2019)

`4 வருடத்துக்கு முன் கொடுக்கப்பட்ட பொய்யான புகாருக்கு இப்போது எப்.ஐ.ஆர்!' - கொதிக்கும் கதிர்காமு

தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) அ.ம.மு.க வேட்பாளர் கதிர்காமு மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டு, தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கதிர்காமு மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி தேனி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கதிர்காமு

இது தொடர்பாக இன்று மாலை, பெரியகுளத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்த கதிர்காமு, ``நான்கு வருடத்துக்கு முன்பாக என் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாருக்கு இப்போது என் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நான் யாரையும் மிரட்டவில்லை. வழக்கை சந்திக்கத் தயார். இது பொய்யான புகார்" என்றார்.

கதிர்காமு

நான்கு வருடத்துக்கு முன்பு கொடுக்கப்பட்ட புகார் என்று சொல்கிறீர்களே, அப்போது உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``இல்லை. எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. நான் தலைமறைவாகிவிட்டதாகக் கூறுகிறார்கள். பெரியகுளத்தில் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறேன்" என்று பதிலளித்தார். உடன் இருந்த தங்க தமிழ்ச்செல்வன், ``எல்லாம் அரசியலுக்காகவே நடக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் ஓ.பி.எஸ்., ஓ.பி.எஸ் மகன்., ஓ.பி.எஸ் தம்பி ஆகியோர்தான் காரணம்" என்றார்.