`ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தைச் சொன்னான்' - காவல் நிலையத்தில் மாணவி கதறல் | Chennai College student files case against lover

வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (09/04/2019)

கடைசி தொடர்பு:18:53 (09/04/2019)

`ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தைச் சொன்னான்' - காவல் நிலையத்தில் மாணவி கதறல்

காதல் ஜோடி காவல்

ஒவ்வொரு முறையும் பணம், நகைகளை வாங்கும்போது ஒரு காரணத்தைச் சொல்லி ஏமாத்தினான். அவன் சொன்ன காரணத்தை உண்மை என நம்பினேன். நகையைத் திரும்பக் கேட்டபோதுதான் அவனின் சுயரூபம் எனக்குத் தெரியவந்தது என காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி கண்ணீர்மல்க போலீஸாரிடம் கூறினார். 

வடசென்னை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு வயது 18. தண்டையார் பேட்டையைச் சேர்ந்த நரேஷ் (19) என்ற வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகினர். கடந்த 6 மாதங்களாக நரேஷை மாணவி உயிருக்கு உயிராய் காதலித்துள்ளார். ஆனால் நரேஷ், மாணவியை ஏடிஎம் மிஷினாகவே பார்த்துள்ளார். தனக்கு பணம் தேவைப்படும்போது எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பணம் கேட்டுள்ளார். அதை நம்பிய மாணவியும் நரேஷுக்கு பணம் கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் நரேஷ் பணம் கேட்டு மாணவியை நச்சரிக்கத் தொடங்கினார். காதலன் என்பதால் மாணவியும் வீட்டில் கொடுக்கும் பணத்தை நரேஷுக்கு கொடுத்து வந்துள்ளார். இது தொடர்கதையாகியுள்ளது. காதலிக்கும்போது இருவரும் நெருக்கமாக பல புகைப்படங்களை எடுத்துள்ளனர். அதை நரேஷ், தன்னுடைய செல்போனில் பத்திரமாக வைத்திருந்தார். 

இந்த நிலையில், மாணவியைச் சந்தித்த நரேஷ், தனக்கு அவசரமாக லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். நரேஷ் சொன்ன காரணத்தை நம்பிய மாணவியும், வீட்டிலிருந்து 5 சவரன் நகைகளைத் திருடிக் கொடுத்துள்ளார். அதைக் கொண்டு பணத்தை ஏற்பாடு செய்து நரேஷ், செலவழித்துள்ளார். இந்த நிலையில், மாணவியின் வீட்டில் நகையைக் காணவில்லை என்று கண்டுபிடித்தனர். இதனால் கடந்த 7-ம் தேதி நரேஷிடம் வீட்டில் நடந்த விவரத்தைச் சொல்லிய மாணவி, 5 சவரன் நகையைத் திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு நரேஷ், நகையை என்னால் திரும்பத் தரமுடியாது என்று மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நரேஷ், மாணவியிடம் பழகுவதை தவிர்த்துள்ளார். ஆனால், மாணவியோ, நகைகளைத் திரும்பத் தரவில்லை என்றால் வீட்டில் உன்னைப்பற்றி சொல்லிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதற்கு நரேஷ், நீயும் நானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு உன்னை அவமானப்படுத்திவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி, நரேஷ் குறித்த தகவல்களை வீட்டில் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், நரேஷ் குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார், மாணவியிடம் என்ன நடந்தது என்று தனியாக விசாரித்தனர். அப்போது நரேஷ் குறித்த முழுவிவரங்களை மாணவி போலீஸாரிடம் கூறினார். உடனடியாக போலீஸார் நரேஷைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரின் செல்போனில் மாணவியும் நரேஷும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தன. அதைப் பறிமுதல் செய்த போலீஸார் நரேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

காவல்

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் நரேஷிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அவர், 5 சவரன் தங்க நகைகளை வாங்கவில்லை என்று மறுத்தார். இதைக் கேட்ட மாணவி, நகை கொடுத்த விவரத்தை விரிவாக எங்களிடம் கூறினார். மாணவி கூறிய தகவல்படி நரேஷிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அடுத்து, அவரின் செல்போன்களை ஆய்வு செய்தோம். அதில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இருந்தன. மாணவியின் எதிர்காலம் கருதி உடனடியாக அதை அழித்தோம். மாணவியின் புகைப்படங்களை வெளியிடுவதாகக் கூறி மிரட்டியதாக நரேஷ் மீது வழக்கு பதிவு செய்தோம். அதே நேரத்தில் மாணவிக்கு அதிகளவில் பணம் செலவழித்ததாக நரேஷ் எங்களிடம் தெரிவித்தார். இருப்பினும் மாணவி கொடுத்த புகாரின்பேரில் நரேஷை கைது செய்துள்ளோம்". என்றனர். 

 காதல் வலையில் நரேஷ், மாணவியை வீழ்த்தி அவரிடமிருந்து நகை, பணத்தை வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். நரேஷின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.  இதையடுத்து மாணவியிடம் பேசிய போலீஸார், யாரையும் நம்பி ஏமாறக்கூடாது என்று புத்திமதி கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மாணவியின் பெற்றோரும் அவரை சமாதானப்படுத்தினர். 

 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த காதல் பஞ்சாயத்தில் காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன் வைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.