ஆட்சி மாற்றத்துக்கான எண்கள் 21, 22, 23... இது இடைத்தேர்தல் கணக்கு! | Numbers for regime change 21, 22, 23 ... This is a by-election account!

வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (09/04/2019)

கடைசி தொடர்பு:20:44 (09/04/2019)

ஆட்சி மாற்றத்துக்கான எண்கள் 21, 22, 23... இது இடைத்தேர்தல் கணக்கு!

ஆட்சி மாற்றத்துக்கான எண்கள் 21, 22, 23... இது இடைத்தேர்தல் கணக்கு!

மிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 22 சட்டமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றால், மே 23 அன்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அடிக்கல் நாட்டப்படும்.

சாலைகள் அமைதியாக இருக்கின்றன. ஒலிபெருக்கிகள் அலறவில்லை. அரசுச் சுவர்கள் வெண்மையாய்ப் பளிச்சிடுகின்றன. பேனர், போஸ்டர், சுவர் விளம்பரம் எதையும் பார்க்க முடியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் தேர்தல் நடக்கிறதா என்பதே பலத்த சந்தேகமாயிருக்கிறது. எந்த விதமான பரபரப்பும் இல்லாத இப்படி ஒரு தேர்தலை தமிழகம் சந்திப்பது இதுவே முதல் முறையாகத் தெரிகிறது. இனிவரும் காலங்களில் இப்படித்தான் தேர்தல் இருக்கும் என்பதற்கு இதுவே முன்னோட்டம் என்றும் தோன்றுகிறது. இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் கொஞ்சம் தெரிகிறது பரபரப்பு.

இடைத்தேர்தல்

வெளியே எதுவும் தெரியாவிட்டாலும், உள்ளுக்குள்ளே சுறுசுறுப்பாக வேலைகள் நடக்கின்றன. முன்பெல்லாம் வாய் பேசியதை இப்போது கை பேசுகிறது. ஒவ்வொரு முக்கியக் கட்சியின் வேட்பாளர் குறித்தும், அவர்களது நடவடிக்கைகள் குறித்தும் தகவல்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களின் வழியாகப் பரப்பப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன; பகிரப்படுகின்றன. இந்த ‘சோசியல் இன்ஜினீயரிங்’ எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை இப்போதைக்கு யூகிக்க முடியவில்லை.

ஆனால், தேர்தல் வாக்குறுதிகள், பரப்புரைகள், சமூக ஊடகங்களின் சக்தி இவற்றையெல்லாம் தாண்டி, இந்தத் தேர்தலில் பணமே வெற்றியைத் தீர்மானிக்கும் அல்லது திசை திருப்பும் காரணியாக இருக்குமென்பது மட்டும் தெளிவாகத் தெரிந்து விட்டது. ஆளும்கட்சிக்கு ஆதரவான ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள தேர்தல் கருத்துக்கணிப்புகளிலும்கூட, 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் அதிகளவு தொகுதிகளை தி.மு.க கூட்டணியே கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க–பி.ஜே.பி ஆகிய ஆளும்கட்சிகளும், கூட்டணிக்கட்சிகளும் அதிர்ச்சியடைந்துள்ளன. இனிமேல், பணத்தால் மட்டுமே இந்த முடிவுகளை மாற்றமுடியுமென்பதே தற்போதைய களநிலவரமாகவுள்ளது.

அ.தி.மு.க வைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் 40 தொகுதிகளில் வெல்வதை விட, இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெறுவதுதான் ஒரே நோக்கமாகவுள்ளது. இதற்காக எந்த விலை கொடுக்கவும் ஆளும்கட்சி தயாராகவுள்ளது. ஆனால் கருத்துக்கணிப்புகள் எதிராக வருவதால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது. ஆளும்கட்சியின் இந்த அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையூட்டும்விதமாக, காலியாகவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 19 அன்று இடைத்தேர்தல் நடத்தப்படுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்குக் காரணமும் இருக்கிறது. 

 இடைத்தேர்தல் அறிவிப்பு

தற்போதையநிலையில், சட்டமன்றத்தில் அ.தி.மு.க–வுக்கு 108 எம்.எல்.ஏ–க்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் 118 எம்.எல்.ஏ–க்களின் ஆதரவு தேவை. இதன்படி பார்த்தால், இடைத்தேர்தலில் 22ல் 10 தொகுதிகளிலாவது அ.தி.மு.க ஜெயித்தே ஆகவேண்டும். இல்லாவிடில், தி.மு.க நம்பிக்கையில்லாதத் தீர்மானம் கொண்டு வந்தால், ஆட்சி கவிழ்ந்துவிடும். அதே நேரத்தில், தி.மு.க–வால் உடனடியாக ஆட்சி அமைத்துவிடமுடியாது. 

தி.மு.க–88, காங்கிரஸ்–8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் –1 என மொத்தம் 97 எம்.எல்.ஏ–க்கள் ஆதரவு மட்டுமே, தி.மு.க–விற்கு இருக்கிறது. ஆட்சி அமைக்க வேண்டுமெனில் 22ல் 21 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க ஜெயிக்க வேண்டும். ஆனால் அது எளிதான விஷயமில்லை. அதிகபட்சமாக 10 க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்ற ஆளும்கட்சி முயற்சி செய்யும். அது இயலாத பட்சத்தில் குறைந்தபட்சம்10 தொகுதிகளில் ஜெயித்தாவது ஆட்சியைத் தக்க வைக்க மெனக்கெடும். அதுவும் முடியாவிட்டால் தி.மு.க 21 தொகுதிகளில் வெற்றிபெறவிடாமல் தடுக்கப்பார்க்கும்.

தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, காவல்துறை என அனைத்துத்துறைகளின் ஆதரவுடன் ஆளும்கட்சி கூட்டணி, இதைச் சாதித்துவிடும் சாத்தியமே அதிகம். அதனால் தி.மு.க ஆட்சி அமைப்பது இப்போதைக்குக் கானல்நீராகத்தான் இருக்கிறது. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டுமென்பதற்காக அ.தி.மு.க–வும், ஆட்சியை எந்த விதத்திலாவது கைப்பற்ற வேண்டுமென்று தி.மு.க–வும் தீவிரமாகப் போராடப் போகின்றன. இதன் காரணமாக, இனிவரும் நாள்களில் தேர்தல் பணிகள் இன்னும் உக்கிரமமாகும் வாய்ப்புள்ளது.

அதேபோன்று பணமும் கரை புரண்டோடும். தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எங்குமே பணத்தைக் கொண்டு செல்லமுடியாதபடி, தேர்தல் ஆணையமும், வருமானவரித்துறையும் இணைந்து பறிமுதல் செய்து வருகின்றன. பி.ஜே.பி–யின் வேட்டைத் துப்பாக்கியாக வருமானவரித்துறை இருக்கிறது என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக வலுப்பெற்றுவருகிறது. அதற்கேற்ப மத்தியப்பிரதேசத்தில் ஆளும்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் வீடுகளிலும் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவுள்ள தி.மு.க–வினரின் வீடுகளிலும் அடுத்தடுத்து ரெய்டு நடத்தி பணத்தைக் கைப்பற்றி வருகிறது வருமானவரித்துறை. அங்கே ஆளும்கட்சி, இங்கே எதிர்க்கட்சி எனக் குறி வைத்து ரெய்டு நடத்தும் வருமானவரித்துறையும், தேர்தல் ஆணையமும் இங்கே ஆளுங்கட்சியினரையும், அங்கே எதிர்க்கட்சியினரையும் கண்டு கொள்வதேயில்லை.

ஆளும்கட்சிகளின் மீதான அதிருப்தி, டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகள் உள்ளிட்ட பல காரணங்களால் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெறுவது அவ்வளவு எளிதான காரியமாகத் தெரியவில்லை. எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பணத்தை மட்டுமே, அ.தி.மு.க அரசு நம்பியிருக்கிறது. அதனால் இனிவரும்நாள்களில் ஆளும்கூட்டணியினருக்கும்  எதிர்க்கட்சியினருக்குமிடையே பரப்புரை மோதல்களை விட, பணப்பட்டுவாடா தொடர்பான மோதல்கள் அதிகமாகும். 

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, காவல்துறை, மாவட்ட கலெக்டர்கள் எனப் பல தரப்பினரும் சேர்ந்து, ஆளும்கட்சியை வெற்றி பெற வைப்பதற்காகப் பல்வேறு `பகீரத’ முயற்சிகளை மேற்கொள்வது அப்பட்டமாகத் தெரிகிறது. பல தொகுதிகளில் இழுபறி நிலை இருக்கிறது. அத்தகைய தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும், ஆளும்கட்சி கூட்டணியின் வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அப்படி அறிவித்துவிட்டால், அதன்பின் வழக்குப் போடுவதைத் தவிர வேறு வழியேயில்லை. தி.மு.க ஆட்சிக்காலத்தில் ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் போட்ட வழக்கை இதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். வினையை விதைத்த தி.மு.க, இந்தத் தேர்தலில் அதை அமோகமாக அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்போது ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே இது நடந்தது. இந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் இப்படித்தான் நடக்கவாய்ப்புள்ளது!’’ என்றார்.

இதுவரையிலும் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே பணப்பட்டுவாட நடந்துவந்தது. வரும் ஏப்ரல் 12ம் தேதியிலிருந்து ஏப்ரல் 17 வரையிலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் பணிகள் தீவிரமாகும் என்று தெரியவந்துள்ளது. ஏற்கெனவே நகர்ப்புறங்களில் அடிக்கடி `பவர்கட்’ ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த 5 நாள்களிலும் `பவர்கட்’ அதிகரிக்கும்; பணக்கட்டு பல இடங்களுக்கும் பயணிக்கும் என்று அரசியல்விமர்சகர்கள் கணிக்கின்றனர். ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு தி.மு.க–வினரிடமும், கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் முன்பிருந்த போர்க்குணமும், அர்ப்பணிப்பும் இப்போது இருக்கிறதா என்பது சந்தேகமாகவுள்ளது. இதைக் கூட்டணியிலுள்ள கட்சிக்காரர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சீனியர் தலைவர் ஒருவர் கூறுகையில், `ஒரு காலத்தில் தேர்தல் வேலை என்றால், தி.மு.க–வினரைத்தான் மாதிரியாகச் சொல்வார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினரும் பெரும் விழிப்புணர்வுடன் பணி செய்வார்கள். இப்போது எல்லாவற்றிலும் அ.தி.மு.க–வினர் விஞ்சிவிட்டனர். அவர்களிடம் இருக்கும் பணமும், அதிகாரமும்தான் அவர்களுக்கு முழு பலம். தேர்தலி்ல் ஜெயிக்க வேண்டுமென்பதற்காக, எந்த ஒரு காரியத்தைச் செய்யவும் அவர்கள் தயாராகவுள்ளனர். அதே மனநிலையில்தான் பி.ஜே.பி–காரர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் துணையும் இருப்பதால் இந்தத் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் பலரும் பணம் கொடுக்கத் தயாராகவுள்ளனர். ஆனால் கொடுக்க முடியுமா என்பதுதான் சந்தேகமே!’’ என்றார் விரக்தியுடன்.

பணபலம், அதிகாரபலம், அரசியல்பலம் என எல்லா பலங்களையும் திரட்டிக் கொண்டு மதம் கொண்ட யானையாக இந்தத் தேர்தலை அ.தி.மு.க எதிர்கொள்கிறது. ஆளும்கட்சிகளின் அசுரபலத்தை எப்படிச் சமாளிப்பதென்று தெரியாமல் தி.மு.க திணறிக்கொண்டிருக்கிறது. இன்னும் எட்டு நாள்களுக்கு மட்டுமே இந்தப் பரபரப்பு எகிறுமென்று எல்லோரும் நினைத்திருக்க மே 19 வரையிலுமாக ஒரு மாதத்துக்கு இதை நீட்டித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அத்தனை பரபரப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது மே 23.


டிரெண்டிங் @ விகடன்