`ஏ.சி. வாங்கிக் கொடுங்க அத்தான்!' - திருமணம் செய்துகொள்வதாகப் பெண் குரலில் பேசி பணம் சுருட்டிய ஆண் கைது | man poses as women loot money from man

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (09/04/2019)

கடைசி தொடர்பு:20:00 (09/04/2019)

`ஏ.சி. வாங்கிக் கொடுங்க அத்தான்!' - திருமணம் செய்துகொள்வதாகப் பெண் குரலில் பேசி பணம் சுருட்டிய ஆண் கைது

சென்னையைச் சேர்ந்த திருமணமாகாத ஒருவரிடம், திருமணம் செய்துகொள்வதாகப் பெண் குரலில் பேசி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆனந்த். 42 வயதான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சொந்தமாக விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி கை நிறைய சம்பாதித்தாலும், வயதாகிவிட்டதைக் காரணம்காட்டி திருமணத்துக்குப் பெண் தரப் பலரும் மறுத்துள்ளனர். இந்த நிலையில், பிரபலமான மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்து, பெண் தேடியுள்ளார் ஆனந்த்.

திருமணம்சில மாதங்களுக்கு முன்னர், ஹரிணி என்பவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து பேசுவதாக கூறிய ஹரிணி, ``உங்க போட்டோவ மேட்ரிமோனில பார்த்தேன். ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களைக் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.’’ என்று கூறியுள்ளார். சந்தோஷத்தில் குதித்த ஆனந்த், அந்தப் பெண் குரலுடன் அடிக்கடி பேசத் தொடங்கியுள்ளார். ஹரிணியை காதலிக்கவும் தொடங்கிவிட்டார் ஆனந்த். கோயம்புத்தூரில் தனது உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என ஹரிணி கூறியதும், அவர் மீது ஆனந்துக்கு நம்பிக்கை எகிறியுள்ளது. ``எப்போ டார்லிங் சந்திக்கலாம்?” என ஆனந்த் ஆவலாகக் கேட்கும்போதெல்லாம், சந்திப்பை தள்ளிப் போட்டுள்ளார் ஹரிணி.

இந்நிலையில், தனது சித்திக்கு கேன்சர் நோய் முற்றிவிட்டதாகவும், ஆபரேஷனுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும் பதைபதைப்போடு ஹரிணியிடம் இருந்து கடந்த மாதம் போன் வந்துள்ளது. உடனடியாக, ஹரிணி அனுப்பிய பேங்க் அக்கவுண்டில் 60,000 ரூபாயை ஆனந்த் போட்டுள்ளார்.

``நமக்குத்தான் கல்யாணம் ஆகப் போகுதுல்ல. வீட்டுக்குத் தேவையானத இப்பவே வாங்கி வச்சுரணும். ஏ.சி. ஒன்னு வாங்கிக் கொடுங்கங்க அத்தான்’’ என்று கணவனிடம் பேசுவதுபோல கொஞ்சிக் குலாவி ஹரிணி பேச, மயங்கிய ஆனந்தும் ஹரிணி அனுப்பிய அட்ரஸுக்கு ஆன்லைனில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார். இப்படியே ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் என பல பொருள்களும் ஹரிணி அனுப்பிய அட்ரஸுக்கு சென்றுள்ளன. ஒருகட்டத்தில், ஹரிணியின் நடவடிக்கையில் ஆனந்துக்கு சந்தேகம் துளிர்விட்டுள்ளது.

கைது

ஹரிணியை கடுமையாக வற்புறுத்தி, கடந்தவாரம் வடபழநி ஆற்காடு சாலைக்கு வரவழைத்துள்ளார். ஆனால், வந்து நின்றவரோ ஒரு ஆண். ``ஹரிணி மேடம்தான் அனுப்பினாங்க. அவங்களால வர முடியலயாம்.’’ என்று அந்நபர் கூற, ``இங்க வெயிட் பண்றதா இவ்ளோ நேரம் என்கிட்ட தானே பேசிட்டு இருந்தாங்களே” என்று ஆனந்த் சந்தேகம் அடைந்துள்ளார். வந்திருந்த நபரின் குரலில் ஹரிணியின் வாய்ஸ் லேசாக தென்பட, தன்னை ஏமாற்றிவிட்டார்களோ? என்கிற கோபம் ஆனந்துக்கு ஏற்பட்டுள்ளது. அந்நபரை பிடித்து உடனடியாக எம்.ஜி.ஆர்.நகர் போலீஸில் ஒப்படைக்க, ஹரிணி என்கிற பெயரில் மிமிக்ரி செய்து ஆனந்தை ஏமாற்றியது செந்தில் என்கிற அந்த நபர்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த செந்திலுக்கு 39 வயதாகிறது. திருமணம் செய்துகொள்வதாகப் பெண் குரலில் பேசி பலரையும் ஏமாற்றியுள்ளாராம். திருமணத்துக்குப் பெண் எதிர்பார்த்து மேட்ரிமோனியில் பதிவு செய்திருக்கும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் செந்திலின் டார்கெட். மேட்ரிமோனியல் நிறுவனத்தில் 4,000 ரூபாய் செலுத்தி, சம்பந்தப்பட்டவர்களின் போன் நம்பரை பெற்றுக்கொள்ளும் செந்தில், அவர்களிடம் பெண் குரலில் இனிக்க இனிக்கப் பேசி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளார். தற்போது, அவர் மீதுள்ள பழைய புகார்களையும் தோண்டத் தொடங்கியுள்ளது காவல்துறை. பெண் என நினைத்து, திருமணக் கனவுகளுடன் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ள ஆனந்துக்கு போலீஸார் ஆறுதல் சொல்லி அனுப்பினர்.