`கோடையில் சிறப்புப் பயிற்சி வகுப்பு கூடாது; மீறினால் நடவடிக்கை!' - எச்சரிக்கும் பள்ளிக் கல்வித்துறை | TN school education department warns private schools over summer special classes

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (09/04/2019)

கடைசி தொடர்பு:21:20 (09/04/2019)

`கோடையில் சிறப்புப் பயிற்சி வகுப்பு கூடாது; மீறினால் நடவடிக்கை!' - எச்சரிக்கும் பள்ளிக் கல்வித்துறை

கோடைவிடுமுறையில் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கை

மக்களவைத்தேர்தல் நடைபெறவிருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான முழுஆண்டுத்தேர்வுகள் விரைவில் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த வார இறுதிக்குள் தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறை தொடங்கும் எனத் தெரிகிறது. கோடைவிடுமுறைக்குப் பின் ஜூன் மாதம் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே கோடை விடுமுறையின்போது மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க பல்வேறு பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்கள்

அதில், மாணவர்களின் நலன்கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனக் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. அதைப் பின்பற்றி, கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி நடத்துவதை தவிர்க்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலங்களில், மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்படும் என்பதால், அவர்களுக்கு கட்டாயம் ஓய்வு தேவை. எனவே மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறக் கூடாது எனப் பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் தெரிவிக்க வேண்டும். மேலும் அப்படி சிறப்புப் பயிற்சிகள் நடத்துவதாகப் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்தால், காலதாமதமின்றி மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.