`கருணாநிதி பேச்சில் இருந்த நாகரிகம் ஸ்டாலினிடம் இல்லை!' – தமிழிசை | Tamilisai slams stalin

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (09/04/2019)

கடைசி தொடர்பு:21:00 (09/04/2019)

`கருணாநிதி பேச்சில் இருந்த நாகரிகம் ஸ்டாலினிடம் இல்லை!' – தமிழிசை

``எதுகை, மோனை என நினைத்து ஸ்டாலின் தொடர்ச்சியாக நாகரிகமற்ற முறையில் பேசி வருகிறார். கருணாநிதியின் பேச்சில் நாகரிகமான உவமை இருக்கும். ஆனால், ஸ்டாலின் பேச்சு நாளுக்கு நாள் மக்களிடையே அவருக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டே வருகிறது.” என தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழிசை

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தேர்தல் தலைமை காரியாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வரும் 11-ம் தேதி தூத்துக்குடியில் எனக்காக தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எனக்கு, நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை மக்கள் எனக்கு வாய்ப்பு அளித்தால், ஒரு நல்ல எம்.பி., எப்படி செயல்படுவார் என்பதை தேர்தலுக்குப் பிறகு நான் நிரூபிப்பேன்.

பா.ஜ.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஒரு நாடு எப்படி முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்பதைக் காட்டும் விதமாக இருக்கிறது. அந்த அறிக்கையை, ஒன்றுமில்லாத தேர்தல் அறிக்கை என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், வெள்ளை அறிக்கை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கூறியுள்ளனர். நீட் தேர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும்போது, அதை நீக்குவோம் என காங்கிரஸ்-தி.மு.க-வினர் சொல்வது மக்களைத் தெரிந்தே ஏமாற்றும் செயல். மோடி அறிவித்த பா.ஜ.க தேர்தல் அறிக்கையால் ஒரு கோடி ஏழைக் குடும்பங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். இதனால் அந்த மக்கள் வாழ்வாதாரம் உயரும்.

ஸ்டாலின்

நதிகள் இணைப்புத் திட்டம் என்பது பா.ஜ.க-வின் முந்தைய பிரதமர் வாஜ்பாய் வலியுறுத்திய திட்டம். அதன் அடிப்படையிலேயே பா.ஜ.க., தன் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது. இது ஒரு நீண்டகாலத் திட்டம். நடிகர் ரஜினிகாந்த் அதை வரவேற்றுள்ளது நல்ல அம்சம். தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை பழிவாங்குதல் நடவடிக்கை என்பதாக அர்த்தம் இல்லை. அவர்கள் தொடர்ந்து இதுகுறித்து பா.ஜ.வையே குற்றம்சாட்டி வருகின்றனர். இந்து மதத்தைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் தி.மு.க-வினர், இந்துக்களை எவ்வளவு வேண்டுமானால் விமர்சனம் செய்யலாம் என நினைக்கின்றனர். இதனால், நாங்கள் காயப்படுகிறோம் என இந்து மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இனி மக்கள் தி.மு.க-வை நம்பமாட்டார்கள். 

தமிழகத்தில் தற்போது நிலவுவது யதார்த்தமான கள நிலவரம். தமிழகத்தில் இனிதான் பா.ஜ.க.-வுக்கு சாதகமானச் சூழல் வரும். தற்போதைய கருத்துக்கணிப்புகள் முழுமையாக ஆராயாத முதிர்ச்சியடையாத கருத்துக்கணிப்பு. எதுகை, மோனை என நினைத்து ஸ்டாலின் தொடர்ச்சியாக நாகரிகமற்ற முறையில் பேசி வருகிறார். கருணாநிதியின் பேச்சில் நாகரிகமான உவமை இருக்கும். ஸ்டாலின் பேச்சு நாளுக்கு நாள் மக்களிடையே அவருக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துகொண்டே வருகிறது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க