`வாசனுக்கு கிடைத்த வாய்ப்பு ஓ.பி.எஸ்ஸுக்கு கிடைக்கவில்லை!' - கோவை பொதுக்கூட்டம் பரிதாபங்கள் | OPS And Sarathkumar didn't speak in Coimbatore public meeting

வெளியிடப்பட்ட நேரம்: 21:53 (09/04/2019)

கடைசி தொடர்பு:07:04 (10/04/2019)

`வாசனுக்கு கிடைத்த வாய்ப்பு ஓ.பி.எஸ்ஸுக்கு கிடைக்கவில்லை!' - கோவை பொதுக்கூட்டம் பரிதாபங்கள்

கோவையில் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில், ஓ.பி.எஸ் மற்றும் சரத்குமார் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கோவை பொதுக் கூட்டம்

பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டம், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பி.ஜே.பி வானதி சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தே.மு.தி.க தரப்பில் விஜயகாந்த் அல்லது பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரில் ஒருவர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவருமே கலந்துகொள்ளவில்லை. கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் என்பதால், அந்த நான்கு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதில் மோடி, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், அமைச்சர்கள் மேடை ஏறுவதற்கு முன்பே சரத்குமார் வந்துவிட்டார். அ.தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், பி.ஜே.பி நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தனர். சரத்குமார் பேச வரும்போது, மோடி உள்ளிட்டோர் மேடை ஏறிவிட்டனர்.

கோவை பொதுக்கூட்டம்

இதனால், சரத்குமாரால் பேச முடியவில்லை. சரி, மோடிக்கு வரவேற்பு கொடுத்துவிட்டு பேச வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மோடி பேச நேரம் குறைவாக இருந்ததால், பேச்சாளர்கள் லிஸ்ட்-டில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, மோடி மேடை ஏறியதும், எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, ஜி.கே. வாசன் ஆகிய மூன்று பேர் மட்டுமே பேசினர். மோடி பேசி முடித்ததும், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.ஆனால், கடைசி வரை ஓ.பன்னீர்செல்வத்துக்கோ, சரத்குமாருக்கோ பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.