``என்னுடைய ஆட்சியில்தான் ஸ்டாலினால் மதுரைக்குள் நுழைய முடிகிறது!” - முதல்வர் பழனிசாமி பெருமிதம் | Chief minister palanisamy's election campaign at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (10/04/2019)

கடைசி தொடர்பு:07:50 (10/04/2019)

``என்னுடைய ஆட்சியில்தான் ஸ்டாலினால் மதுரைக்குள் நுழைய முடிகிறது!” - முதல்வர் பழனிசாமி பெருமிதம்

'என்னுடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், மு.க ஸ்டாலினால் மதுரைக்குச் சென்றுவர முடிகிறது' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

பழனிசாமி

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை ஆதரித்து, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக பிரசாரத்துக்கு மக்கள் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, தேர்தல் விதிமுறைகளை மீறி, சுமார் 50 - க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களில் பொதுமக்களை அ.தி.மு.க-வினர் அழைத்துவந்திருந்தனர். சம்பவ இடத்தில் இருந்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் அவற்றை கண்டும் காணாததுபோல இருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.

பின்னர், பிரசாரத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமி, ``வரும் தேர்தலுக்காக தி.மு.க சார்பில் அறிவித்திருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை.  நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைக்காமல், 2021 - ல் வரக்கூடிய சட்டசபைத் தேர்தலை நினைத்து வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின். அவரது ஆட்சியில், 2 ஏக்கர் நிலம் தருவோம் என்றார்கள். ஆனால், மக்களின் நிலத்தை தி.மு.க-வினர்தான் அபகரித்தார்களே தவிர, மக்கள் யாருக்கும் நிலம் கொடுக்கவில்லை. தி.மு.க-வின் எம்.எல்.ஏ உட்பட பலபேர் பாலியல் வழக்கில் சிக்கியிருக்கிறார்கள். தி.மு.க-வினர் பிரியாணிக்கும், பரோட்டாவுக்கும் தகராறு செய்பவர்கள். தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்தும்கூட மதுரைக்குள் நுழையவே அச்சப்பட்டவர் மு.க ஸ்டாலின். ஆனால் தற்போது, அ.தி.மு.க-வின் ஆட்சியில் மதுரைக்கு அவர் இயல்பாகச் சென்றுவருகிறார். அந்த அளவுக்கு என்னுடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது.

கலைஞர் கருணாநிதி இறந்தபோது, அவரது உடலை மெரினா கடற்கரையில் அடக்கம்செய்ய அனுமதி கேட்டார்கள். ஆனால், ஒரு சில வழக்குகள் காரணமாக எங்களால் மெரினாவில் இடம் அளிக்க முடியவில்லை. இருப்பினும், நகரின் மிக முக்கியப் பகுதியில் சுமார் 310 கோடி மதிப்பிலான மாற்று இடத்தை கலைஞருக்காக நாங்கள் வழங்க முன்வந்தோம். ஆனால், மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக தி.மு.க-வின் தூண்டுதலால் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்தவர்கள், உடனடியாக அந்த வழக்குகளை வாபஸ் பெற்றார்கள். அதன்பிறகே, நீதிமன்ற உத்தரவுமூலம் மெரினாவில் கலைஞருக்கு இடம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று, தேர்தலுக்காக மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள். தி.மு.க-வும் காங்கிரஸும் தங்களுடைய சாதனைகளைப் பற்றி மக்களிடம்கூறி எங்காவது வாக்கு கேட்கிறார்களா? காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராகப் பதவி வகித்தார். ஆனால் அவர், தமிழகத்துக்கு  ஏதாவது செய்தாரா? பிரதமர் மோடியையும் என்னையும் மற்றும் எங்களது அமைச்சர்களையும் பற்றிக் குறைகூறியே எதிர்க்கட்சியினர் மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள்” என்று பேசினார்.