``அன்று ஜெயலலிதா சொன்னதையே எடப்பாடி இன்று சொல்கிறார்” - பழனிசாமியை விளாசிய பழ.கருப்பையா | D.M.K Karuppaiyaa speech in nilgrils constituency

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (10/04/2019)

கடைசி தொடர்பு:08:15 (10/04/2019)

``அன்று ஜெயலலிதா சொன்னதையே எடப்பாடி இன்று சொல்கிறார்” - பழனிசாமியை விளாசிய பழ.கருப்பையா

95 வயது நிரம்பிய கருணாநிதி மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மூளையில் கோளாறு என ஊட்டியில் பழ.கருப்பையா பேசினார். 

பழ.கருப்பையா

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ராசாவை ஆதரித்து நகர தி.மு.க., சார்பில் ஊட்டி ஏ.டி.சி., சுதந்திரத் திடலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான பழ.கருப்பையா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில், ``அ.தி.மு.க., ஆட்சி நிலைக்க வேண்டும் என்றால் 18 சட்டமன்ற இடைத் தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால், மூன்று இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. விரைவில் எடப்பாடி வீட்டிற்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது. தி.மு.க., தலைவர் கலைஞர் மரணம் குறித்து எடப்பாடி ஊட்டியில் விமர்சித்துள்ளார். தோல்வி பயத்தால், அவருக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,விற்கு தெரிந்தது அந்தக் காலத்தில் இருந்து சாவு அரசியல்தான். அரசியல் கொள்கை என்று அ.தி.மு.க.,விற்குத் தெரியாது. எம்.ஜி.ஆர்.,., இறந்த சமயத்தில், அ.தி.மு.க., இரண்டாகப் பிரிந்திருந்த போது, எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி விஷம் வைத்து எம்.ஜி.ஆரைக் கொன்றுவிட்டார் என ஜெயலலிதா கூறினார். அதற்கு பதில் கொடுக்கும் வகையில் ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதா எம்.ஜி.ஆரை கொன்றார் எனச் சாடிக் கொண்டனர். சாவு அரசியல் நடத்துவதே அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. எனவே எடப்பாடியும் அதே வழியைப் பின்பற்றுகிறார்” என்றார்.

கூட்டம்

தி.மு.க.சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் ராசா கலந்துகொள்ளவில்லை. அதே போல் கூட்டணிக் கட்சிகள் கூடப் பெரிய அளவில் பங்கேற்கவில்லை. கூட்டம் காண்பிக்க ஊட்டி நகரில் இருந்த மது பிரியர்களை கூட்டத்துக்கு அழைத்துவந்து உட்கார வைத்திருந்தனர். அவர்கள் பழ.கருப்பையாவைப் பேச விடாமல் மேடைக்குக் கீழிருந்து கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர். இதில் கடுப்பான அவர் ஒரு கட்டத்தில் அவர்களைத் திட்டினார். மது பிரியர்கள் தொல்லை தாங்காமல் கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் பலரும் பாதியில் எழுந்து சென்றுவிட்டனர். இதனால் பல நாற்காலிகள்  காலியாகவே கிடந்தன.