``எடப்பாடியும், பன்னீர் செல்வமும் பழைய தொழிலுக்குச் செல்ல வேண்டியதுதான்" - பிரசாரத்தில் அதிர்ந்த தினகரன் | Edappadi and Panneer will back to the old business if they wont win - Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (10/04/2019)

கடைசி தொடர்பு:09:40 (10/04/2019)

``எடப்பாடியும், பன்னீர் செல்வமும் பழைய தொழிலுக்குச் செல்ல வேண்டியதுதான்" - பிரசாரத்தில் அதிர்ந்த தினகரன்

 ``இடைத்தேர்தலில் 8 தொகுதிகளை வெல்லாவிடில் எடப்பாடி சர்க்கரை விற்கவும், பன்னீர் பால் விற்கவும் செல்ல வேண்டிய நிலை உருவாகும்” என பரமக்குடியில் டி.டி.வி. தினகரன் கூறினார். 

பரமக்குடியில் பிரசாரம் செய்த தினகரன்
 

அ.ம.மு.க-வின் ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் வ.து.ந.ஆனந்த், பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா ஆகியோரை ஆதரித்து, அ.ம.மு.க-வின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பரமக்குடியில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய தினகரன், ``எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதற்காக டாக்டர் முத்தையா எம்.எல்.ஏ பதவியை இழந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தி.மு.கவுடன் சேர்ந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தார். ஆனால் முத்தையா பழனிசாமிக்கு வாக்களித்தார். துரோகத்துக்கு எடுத்துக்காட்டு பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்தான். அதனால் கொங்கு நாட்டு மக்கள் `இனிமேல் பழனிசாமி, பன்னீர் செல்வம் எனப் பெயர் வைக்கமாட்டோம்' என என்னிடம் கூறினர்.

பரமக்குடியில் பிரசாரம் செய்த தினகரன் 

ராமநாதபுரத்தில் ஒரு நாலடியார் அமைச்சராக உள்ளார். அவர் ஒரு டாக்டர். ஆனால் துரோகத்துக்கு துணை போன டாக்டர் அவர். இங்கு நான் வாக்கு கேட்டு வந்திருக்கும் முத்தையாவும் ஒரு டாக்டர்தான். ஆனால் இவர் தியாகத்திற்கு துணையாக இருந்தவர். அந்த நாலடியார் அமைச்சர், குக்கர் சின்னத்தை எங்களுக்குக் கிடைக்க விடாமல் செய்தது தாங்கள்தான் எனக் கூறியுள்ளார். இதிலிருந்தே அ.ம.மு.க மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை காட்டுகிறது. இது நம்பியார் காலத்து பார்முலா. எங்களுக்கு எந்தச் சின்னம் கொடுத்தாலும் வெற்றி நிச்சயம்.
 
மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற கூட்டணி என நாட்டை ஏமாற்றுகிறார். நான் இந்துக்களுக்கு எதிரியல்ல என்கிறார். பொள்ளாச்சியி்ல் நடந்த பாலியல் சம்பவத்துக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகிய இருவரது ஆட்சியைக் குறை சொல்லாமல், தி.க தலைவர் வீரமணி கிருஷ்ணரைக் குறை கூறுகிறார். அரசியல்வாதிகள் சாதி, மதத்தைப் பற்றிப் பேசக்கூடாது. தமிழகத்தில் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அ.ம.மு.க. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அ.தி.மு.க இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால், பழனிசாமி சர்க்கரை விற்கவும், பன்னீர் செல்வம் பால் விற்கவும் போக வேண்டும். அ.தி.மு.கவினர் பணமூட்டையை நம்பி தேர்தலைச் சந்திக்கின்றனர். நாங்கள் மக்களை நம்பியுள்ளோம். பிரதமர் மோடிக்குத் தலை வணங்காத ஒரே கட்சி அ.ம.மு.க. நாங்கள் மக்களுக்காக மட்டும் தலைவணங்குவோம். நாங்கள் பதவிக்காகவும், பணத்திற்காகவும் அலைபவர்கள் அல்ல. சிறுபான்மை, பெரும்பான்மை என அனைத்து தரப்பு மக்களுக்காக உழைப்போம். எங்களது கட்சி வெற்றி பெற்றால் பரமக்குடியில் அரசு பொறியியல் கல்லூரி, பாதாளச்சாக்கடை திட்டம், பருத்தியைப் பிரித்தெடுக்க ஜின்னிங் மில், நெசவாளர் குழந்தைகளுக்கு தனிப் பள்ளிக்கூடம், தொழிலாளர் நல மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவோம்” என்றார்.