வேலூர் அருகே சூப்பர் மார்க்கெட், மருந்தகத்தில் ஐ.டி ரெய்டு! - கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியதா? | IT raid in super market near Vellore

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (10/04/2019)

கடைசி தொடர்பு:09:25 (10/04/2019)

வேலூர் அருகே சூப்பர் மார்க்கெட், மருந்தகத்தில் ஐ.டி ரெய்டு! - கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியதா?

வேலூர் அருகே கமலக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்தகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்திவருகிறார்கள். இந்தச் சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

‘கவி’ சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்தகம் ரெய்டு

வேலூர் அடுத்த பள்ளிகொண்டா பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையோரம் கமலக்கண்ணன் என்பவர் `கவி’ சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்தகம் நடத்திவருகிறார். இவர் முறையான வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாமல் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, 15 பேர் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் 9-ம் தேதி கமலக்கண்ணனின் வீடு, சூப்பர் மார்க்கெட், மருந்தகம் உட்பட அவருக்குச் சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கப் பணமும் கட்டுக்கட்டாக நள்ளிரவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. ஆனால், பணம் கைப்பற்றியதைப் பற்றி வருமானவரித் துறையினர் அதிகார பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. தொடர்ந்து, சோதனை நடத்திவருகின்றனர்.