`சந்திரமுகி அரசியல்வாதிகள்... விஞ்ஞான தி.மு.க... ஊழல் கூட்டணி!'‍ `தொப்பி' ராஜேஸ்வரி பிரியா | Rajeshwari Priya slams DMK over corruption

வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (10/04/2019)

கடைசி தொடர்பு:15:34 (10/04/2019)

`சந்திரமுகி அரசியல்வாதிகள்... விஞ்ஞான தி.மு.க... ஊழல் கூட்டணி!'‍ `தொப்பி' ராஜேஸ்வரி பிரியா

அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.வைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா அக்கட்சியிலிருந்து  விலகி `அனைத்து மக்கள் அரசியல் கட்சி'யைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய கையோடு சுயேச்சையாக தென்சென்னை தொகுதியில்  தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார்.  தொப்பியை அணிந்தபடி தென்சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ்வரி பிரியாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

ராஜேஸ்வரி பிரியா 

பா.ம.க.விலிருந்து விலகி புதியதாக அரசியல் கட்சி தொடங்கியதும் தென்சென்னையில் சுயேச்சையாக போட்டியிடுகிறீர்கள். எப்படி இருக்கிறது தேர்தல் அனுபவம்?. 

``அரசியல் கட்சிகளைத்தான் மக்கள் வரவேற்பார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், சுயேச்சை வேட்பாளரான என்னையும் மக்கள் அன்போடு வரவேற்கின்றனர். பிரசாரத்துக்காக மக்களைச் சந்திக்கும்போது புதிதாக மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இயற்கை பேரிடர்கள் நடக்கும்போது அங்கு உதவி செய்வோம். சென்னையில் வாழும் மக்களின் தினசரி வாழ்க்கைக்கூட இயற்கை இடர்பாடுகள் போல அமைந்துள்ளது. தேர்தல் ஒருபுறம் இருந்தாலும் மக்களின் அனுபவத்தை நேரில் காண முடிந்தது. மக்களின் நிலைமையைப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது. மக்களின் அன்பும் ஆதரவைப் பார்க்கும்போது நான் வெற்றி பெறக்கூட வாய்ப்புள்ளது". 

தொகுதி மக்கள் உங்களிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன? 

``சென்னையை பொறுத்தவரை மக்களின் முக்கியமான பிரச்னையாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக குப்பை. கொசு பிரச்னை, சாக்கடை பிரச்னை என மக்களின் அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் உள்ளது. வேளச்சேரியில் ஏரியை சுருக்கி அரசே வீடுகள் கட்டி விற்றுள்ளன. அதன்மூலம் ஆட்சியில் உள்ளவர்கள் பணம் சம்பாதித்துள்ளனர். அந்தப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி இல்லை. அந்தச் சாலையில் கர்ப்பிணிகள் வாகனத்தில் செல்ல முடியாது. சாலையில் நடந்துதான் செல்ல வேண்டும் என்ற சூழல் உள்ளது. மக்களுக்காக நான் வாய்ப்பு கேட்கிறேன். தேர்தலில் பங்கேற்பதுதான் என்னுடைய வெற்றி. என்னை வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. இதுதான் என்னுடைய தேர்தல் ஸ்லோகன். பண ஆசை, உயிர் பயம் இல்லாமல் சுயநலமில்லாமல் தேர்தலைச் சந்திக்கிறேன். என்னைத் தேர்வு செய்வது மக்களின் கடமை".

 ராஜேஸ்வரி பிரியா

மக்களின் பிரச்னைக்களுக்குத் தீர்வு காண என்ன திட்டங்கள் முன்வைத்துள்ளீர்கள்?

``குடிநீருக்காக சிறப்புத் திட்டம் என்னிடம் உள்ளது. நான் சிங்கப்பூரில் வேலை பார்த்துள்ளேன். அங்குள்ள குடிநீர் திட்டத்தை தென்சென்னையில் அமல்படுத்துவேன். மக்கள் வாய்ப்பு அளித்தால் அந்தத் திட்டங்களைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். ஏழை, எளிய மக்களின் ஓட்டுக்களைப் பெற தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் சந்திக்கின்றனர். அப்போது வாக்குறுதிகளை அள்ளிவீசுகின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை".

சுயேச்சை வேட்பாளரான நீங்கள் எதிரணியினரின் பலத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? 

 ``ஊழல் கூட்டணி எனக்குப்பிடிக்கவில்லை. அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்ததும் அந்தக்கட்சியிலிருந்து விலகினேன். என்றுமே நான் பா.ம.க.வை விமர்சிக்க மாட்டேன். தற்போது அமைந்துள்ள கூட்டணி என்பது கொள்கை, கொள்ளைக்கார கூட்டணி. அரசியல் கட்சிகளில் வாரிசுகள்தான் தேர்தலில் களமிறக்கப்படுகின்றனர். வாரிசுகளை தேர்தலில் களமிறக்குப்படுவது தவறல்ல. ஆனால் அந்த வாரிசுகளுக்கு மக்கள் குறித்த அனுபவங்கள் இல்லை. தேர்தலில் போட்டியிடும் வாரிசுகள் கோடீஸ்வரர்களாகவே வளர்ந்தவர்கள். அவர்களுக்கு மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து தெரிவதில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து நான் கவலைப்படுவதில்லை. நியூஸிலாந்தில் இளம்பெண் பிரதமராக தேர்வு செய்யப்படும்போது ராஜேஸ்வரி பிரியாவை தென்சென்னை தொகுதி மக்கள் தேர்வு செய்ய மாட்டார்களா."

 வாரிசு அரசியலை வரவேற்கிறீர்களா? 

 ``வாரிசு அரசியல் என்பது மன்னர் ஆட்சியைப் போல கருதப்படுகிறது. வரலாற்றில் மன்னர் என்றால் அவரின் மகன் இளவரசராக இருக்க அவருக்கென்று தனித்தகுதிகள் இருந்தன. இளவரசர் சும்மா உருவாக முடியாது. ஆனால், இன்றைய வாரிசுகளுக்கு எந்தவித அனுபவம் தகுதியும் இல்லை. வாரிசு அரசியலில் அப்பாவுடன் இணைந்து மக்களுக்காக போராடியவர்கள் வரலாம். எம்.பி.பி.எஸ். படித்த மகனை இரட்டை இலைச் சின்னம் இருக்கிறது என்று தேர்தலில் போட்டியிட வைப்பது எந்தவிதத்தில் நியாயம். தொகுதி, மக்கள் என்றால் அந்த வாரிசுக்கு என்ன என்று தெரியும். எதுவுமே தெரியாதவருக்கு பதவி அதிகாரம் கிடைத்துவிடுகிறது. மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்ளவே 5 ஆண்டுகளாகிவிடுகின்றன. அவர்கள் கொடுத்த அறிக்கையில் கொடுத்துள்ள திட்டங்கள் நடந்துகொண்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளன." 

இந்தத் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லை. அரசியல் வெற்றிடத்தில் சுயேச்சைகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

 ``கண்டிப்பாக வாய்ப்பு அளிப்பார்கள். இது காலத்தின் கட்டளை. மக்களுக்கு எல்லாம் தெரியும். இதனால் சுயேச்சைகளுக்கு வாய்ப்பு அளிப்பார்கள். எந்த விஷயத்தையும் மூடி மறைக்க முடியாது. மக்கள் விழிப்புணர்வாக இருக்கின்றனர். சாமானியர் ஒருத்தரை தேர்வு செய்ய வழிவகுக்கும். சினிமா பிரபலத்தாலும் வாரிசுகளாலும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது. சாமானியர் ஒருவரால்தான் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும்".

 பணம் கொடுத்து ஓட்டுகள் வாங்கப்படும் நிலை மாறுமா?

``இது ஜனநாயகத்தின் மோசமான நிலை. இதற்குப் பதில் கொடுக்க வேண்டும் என்றால் எளிய மக்களின் ஓட்டுக்கள்தான் பணம் கொடுத்து வாங்கப்படுகின்றன. ஐடி நிறுவனத்தில் பணியாற்றுபவர்களிடம் பணம் கொடுத்து ஓட்டுக்கள் வாங்க முடியாது. 40 சதவிகிதத்தினர் வாக்களிப்பதில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் வாக்களித்தால் அரசியலின் நிலைமை மாறிவிடும். அதன்பிறகு பணம் கொடுப்பதை அரசியல் கட்சிகள் நிறுத்திவிடும். ஏழ்மை மாற வேண்டும். அதற்காகத்தான் போராடிவருகிறேன். நேர்மையான அரசியலுக்காகத்தான் என்னைப் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். மாறி, மாறி ஊழலில் கட்சிகள் ஈடுபடுகின்றன. தி.மு.க.வைப் பொறுத்தவரை விஞ்ஞான ஊழல்." 

தேர்தல் சமயத்தில் கோடிக்கணக்கில் பணம், தங்கம், பொருள்கள் சிக்கிவருகிறதே. இதனால் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படுமா?

 ``கோடிக்கணக்கில் பணம், தங்கம், பொருள்கள் சிக்கியபிறகு எதற்காக தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலை நிறுத்துங்கள். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மை பறிக்கப்படுகிறது. அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. ஆட்சியாளர்கள் தலையிடக்கூடாது. தேர்தல் நேரத்தில் சந்திரமுகியாக சிலர் மாறிவிடுகின்றனர். ஜனநாயகமே சீர்குலைந்துள்ளது. இவ்வளவு கோடிக்கணக்கில் பணம், தங்கம், பொருள்கள் சிக்குவதால் தேர்தலை நிறுத்திவிட வேண்டும். தேர்தலை நிறுத்தியிருந்தால் மட்டுமே ஜனநாயகம் இருக்கும். கோடிக்கணக்கில் பணம் சிக்கினாலும் தேர்தல் நடக்கும். பணம் கொடுத்து ஓட்டுகள் வாங்கப்படும் அவலம் ஒழிய வேண்டும்". 

ராஜேஸ்வரி பிரியா

சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நீங்கள் தேர்தல் ஆணையத்திடம் பணம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளீர்களா? 

 ``புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. பணம், பொருள்கள், தங்கம் சிக்கிய பிறகு தேர்தலை நிறுத்துங்கள். சிக்கிய பணத்தைக் கொண்டு ரத்து செய்த தேர்தலை நேர்மையான முறையில் நடத்தலாம்". 

 தேர்தல் ஆணையம் நடுநிலைமையோடு செயல்படவில்லையா?

 ``ஆளுங்கட்சியினரின் தலையீடு உள்ளது. தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை சில வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அப்படிப்பட்ட வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக்கூடாது". 

பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்துவருகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? 

 ``பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர்தான் தைரியமாக புகார் கொடுக்கின்றனர். ஆனால், காவல்நிலையத்தில் புகார்கள் வாங்கப்படுவதில்லை. அலைக்கழிக்கப்படுகின்றனர். சமுதாயத்தில் கிருமி மாதிரி ஒரு விஷயம் உள்ளது. அந்தக் கிருமியை அகற்ற அரசு நடவடிக்கை வேண்டும். தண்டனை கடுமையாக்கப்படவேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும். ஏற்கெனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது". 

தென்சென்னை பொறுத்தவரை உங்களின் போட்டியாளர் யார்?

 ``எனக்கு வேட்பாளர்கள் யாரும் போட்டியில்லை. பணம்தான் என் போட்டியாளர். தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இலக்கியவாதி. களப்போராளி அல்ல. ஆனால், நான் போராளி. இதனால் மக்கள் என்னை தேர்வு செய்வார்கள். ஐ.டியில் வேலை பார்ப்பவர்களும் படித்தவர்களும் எளியவர்களும் எனக்கு வாக்களிப்பார்கள். தி.மு.க. வேட்பாளர் வெயிலில் கருத்துப்போய்விட்டதாகக் கூறுவதாக தகவல் உள்ளது. ஆனால் நான் வெயிலில் சென்றால் கருத்துப்போக மாட்டேன்".