'வேலையைப் பாருங்க மாப்பிள்ளை!' - பெரம்பலூர் வேட்பாளரிடம் பாசத்துடன் சொன்ன முதல்வர்! | EPS emotional words to perambalur Candidate

வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (10/04/2019)

கடைசி தொடர்பு:18:04 (10/04/2019)

'வேலையைப் பாருங்க மாப்பிள்ளை!' - பெரம்பலூர் வேட்பாளரிடம் பாசத்துடன் சொன்ன முதல்வர்!

இந்தப் போட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையின்போது, குமாருக்கும் சிவபதிக்கும் பிரச்னை உண்டானது. அடுத்து புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்து, புறநகர் மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான ரத்தினவேலுக்கு எதிராக முதல்வர் வருகையின்போது ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.

'வேலையைப் பாருங்க மாப்பிள்ளை!' - பெரம்பலூர் வேட்பாளரிடம் பாசத்துடன் சொன்ன முதல்வர்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்குச் சில சென்டிமென்ட் பிடிக்கும். அந்தவகையில், பெரம்பலூர் அ.தி.மு.க வேட்பாளர் முழுமையாக நம்புவது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே என்கிறார்கள் லோக்கல் அ.தி.மு.க-வினர்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி களமிறக்கப்பட்டுள்ளார். அரசியல் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்துவிட்ட சிவபதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அமைச்சரவையில் பள்ளிக் கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கியமான துறைகளை வசம் வைத்திருந்தார். அப்போது எழுந்த சில சர்ச்சைகளால் பதவி பறிக்கப்பட்டது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சிவபதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி

இடையில் ஜெயலலிதா மரணமடைந்து, எடப்பாடி பழனிசாமி முதல்வரான சிலமாதங்களில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சிட்டிங் எம்.பி மருதராஜா, பெரம்பலூர் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளர் ராஜாராம், திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகி அருண் செந்தில்ராம் உள்ளிட்ட பலர் சீட் கேட்டுக் காத்திருக்க, சிவபதிக்கே வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்தனைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் சிவபதிக்குமான நெருக்கம்தான் காரணம் என்கிறார்கள்.

சிவபதிஇதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சிக்காரர்கள், “1991-ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இருந்த அப்போதைய தொட்டியம் தொகுதி எம்.எல்.ஏ-வாக சிவபதி இருந்தார். அப்போது தொட்டியத்தையொட்டிவரும் சேலம் எடப்பாடி எம்.எல்.ஏ-வான எடப்பாடி பழனிசாமிக்கும் நெருக்கம் அதிகமானது. மாமா...  மாப்பிள்ளை...  என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு இன்றுவரை இருவருக்குமான நெருக்கம் இப்போதும் தொடர்கிறது. கட்சியில் முக்கியத்துவம் வழங்கவில்லை என்றாலும் சிவபதி அமைதியாக இருந்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் இளைஞரணிப் பொறுப்பு கிடைத்தது. அடுத்து மாவட்டச் செயலாளராக முயற்சி எடுத்தார்.

இந்தப் போட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையின்போது, குமாருக்கும் சிவபதிக்கும் பிரச்னை உண்டானது. அடுத்து புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்து, புறநகர் மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான ரத்தினவேலுக்கு எதிராக முதல்வர் வருகையின்போது ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இதனால் லோக்கல் மாவட்டச் செயலாளர்களான ப.குமார், ரத்தினவேல் ஆகியோருக்கும் சிவபதிக்கும் ஏழாம் பொருத்தம். இந்நிலையில் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், '1 கோடி ரூபாய் மதிப்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் கட்டப்படும்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அடுத்து, முத்தரையர் சமூகப் பிரதிநிதிகளான அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, கு.பா.கிருஷ்ணன், பூனாட்சி, எம்.எல்.ஏ-க்கள் பரமேஸ்வரி, முசிறி செல்வராஜ், எம்.பி மருதைராஜ் ஆகியோருடன் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து கூறியதுடன், தங்கள் சமூகத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டதாம். 'எல்லாம் உன் ஏற்பாடா சிவபதி' எனக் கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி சிட்டிங் எம்.பி-யான குமார், பெரம்பலூர் எம்.பி மருதராஜா ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும் சிவபதிக்கு சீட் வழங்கியுள்ளார். 

சீட் கிடைத்ததும், எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சிவபதியிடம், 'வேலையைப் பாருங்க மாப்பிள்ளை' எனச் சொல்லி அனுப்பினாராம். அதனால்தான் பெரம்பலூரில் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் எனப் பெரியளவில் நடத்தினார்கள். அந்தவிழாவில், வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள பெரம்பலூர் சிட்டிங் எம்.பி மருதராஜா, சிதம்பரம் எம்.பி சந்திரகாசி உள்ளிட்டோர் பவ்யமாகக் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் வேட்பாளர் அறிவிப்பு வெளியான நாள்களிலிருந்து சிவபதியும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் சுற்றிச்சுற்றி வந்தாலும், கொஞ்சம் பணிகள் தொய்வாகவே இருந்தன. இடையில் தொகுதியின் வெயிட்டான வேட்பாளரான பாரிவேந்தர், கட்சிக்காரர்களுக்குப் பலமாகக் கவனிக்க, ர.ர-க்களே கொஞ்சம் அசந்துவிட்டார்கள். சிவபதியின் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சிக்காரர்களை வளைக்க பாரிவேந்தர் திட்டமிட்டு கரன்சியை வாரி இறைத்தார். இந்நிலையில் தொகுதி குறித்து உளவுத்துறை அறிக்கை  முதல்வருக்குப் போகவே கடுப்பான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிவபதியை அழைத்து கடுமையாகப் பேசினாராம். ஆனாலும், மாப்பிள்ளையை ஜெயிக்க வைக்க நினைக்கும் அவர், தொகுதியில் இருக்கும் முத்தரையர் வாக்குகளைக் குறிவைத்து, சங்கங்களைத் தம்பக்கம் இழுக்கும் காய்களை நகர்த்தியுள்ளார். 

அந்தவகையில் இதுவரை தி.மு.க-வை ஆதரித்து வந்த வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கம் மற்றும் தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்த தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைக் கடைசி நேரத்தில் அ.தி.மு.க தம் பக்கம் இழுத்துள்ளது.  மேலும், அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளின் செல்போன் எண்களைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளாராம். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிவபதி ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இவற்றையெல்லாம் பார்த்த சிவபதி, அவரின் குலதெய்வம் கோயிலுக்குப் போய் விழுந்து கும்பிட்டவர், நல்லது நடக்கும் எனப் பலமாக நம்புகிறார்” என்றார்கள்

நம்பிக்கைதானே எல்லாம்.

 

 


டிரெண்டிங் @ விகடன்