`ஒரு மீனவர் உயிர் போனாலும் இலங்கை ராணுவத்தில் பல உயிர் போகும்!'- ராஜேந்திர பாலாஜி ஆவேசம் | Minister KT Rajendrabalaji speaks about fishermen issue

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (10/04/2019)

கடைசி தொடர்பு:15:50 (10/04/2019)

`ஒரு மீனவர் உயிர் போனாலும் இலங்கை ராணுவத்தில் பல உயிர் போகும்!'- ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

``மத்திய அரசில் அ.தி.மு.க அங்கம் வகித்த பின் தமிழக மீனவர் ஒருவரின் உயிர் போனாலும் இலங்கை ராணுவத்தில் பல உயிர் போகும்'' என தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மக்களவைத் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த அலுவலகத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, டி.டி.வி.தினகரனுடன் இருப்பவர்கள் எல்லாம் தவறான ஆட்கள்தான். அவரோடு உள்ள அனைவரும் ஏமாற்றுகின்றனர். எல்லோரும் குற்றம் செய்பவர்கள். தினகரனுடன் அ.தி.மு.க.வுக்கு உழைத்தவர்கள் கொஞ்சம் பேர் மீண்டும் அ.தி.மு.க-வுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பாலியல் புகாரில் சம்பந்தப்பட்ட பெரியகுளம் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் கதிர்காமு உள்ளிட்டோர் மீது நிச்சயம் விசாரணை நடைபெறும். வருமான வரித்துறையினருக்கு தி.மு.க-வினர்தான் தகவல் கொடுக்கின்றனர்.

டி.டி.வி.தினகரன் பேசுவது எல்லாம் பொய். உள்ளே விஷம் வைத்துக்கொண்டு வெளியே சிரிக்கிறார். அதிகார தோரணையில் இருக்கிறார் தினகரன். அவரது குடும்பமே அவருக்கு ஆதரவில்லை. அ.தி.மு.க-வை அழிப்பதற்காகவே பிறந்து வந்தவர் போல பேசுகிறார். அவரது நிலைப்பாடு வேறு. கருணாநிதிக்கு வேண்டுமானால் மக்கள் கஷ்டம் தெரியும். ஆனால் ஸ்டாலினுக்கோ, அவரின் மகனுக்கோ மக்கள் கஷ்டம் தெரியாது. மக்களிடம் அனுதாபம் தேட துரைமுருகன் முயற்சி செய்கிறார். பெரும் நிறுவனங்கள் வந்தால்தான் பலருக்கு வேலை கிடைக்கும். சாதி, மதக்கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தொழிற்சாலைகளை ஆதரித்தால் கார்ப்பரேட்டுகளை ஆதரிக்கிறார் எனக் கூறுவதா? குற்றம் சொல்லியே பேர் வாங்குவதுதான் தி.மு.க-வுக்கு வழக்கம்.

விருதுநகர் மக்களவைத் தேர்தல் அலுவலகத்தை ராஜேந்திரபாலாஜி

மத்திய ஆட்சியில் அ.தி.மு.க பங்கு பெற்ற பின் தமிழக மீனவர்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்தால் இலங்கை அதிபர், பிரதமர், ராணுவம் நிம்மதியாக இருக்க முடியாது. இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர் ஒருவரின் உயிர் போனாலும்கூட இலங்கை ராணுவம் பல உயிரை இழக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ப மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். தி.மு.க போல நாடகம் போட மாட்டோம். எல்லைக் கோட்டில் இந்திய ராணுவத்தை நிறுத்தி இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்புக் கொடுப்போம்'' எனத் தெரிவித்தார்.